நேபாளம் வழியாக.. சத்தமே இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்? புது எச்சரிக்கை
காத்மாண்டு: லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) போன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் நேபாள எல்லையைப் பயன்படுத்தி இந்தியாவில் ஊடுருவித் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நேபாள உயர்மட்ட அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க இந்தியா நேபாளம் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லை தாண்டி தீவிரவாதம் என்பது இப்போது அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இந்தியாவில் கூட பஹல்காமில் கடந்த மே மாதம் மிக மோசமான தாக்குதல் நடந்திருந்தது. எல்லை தாண்டிய தீவிரவாதமே இதற்குக் காரணமாகும். மீண்டும் அதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடுருவும் தீவிரவாதிகள்
இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவில் ஊடுருவித் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இதைத் தடுக்க இந்தியா நேபாளம் இடையே ஒத்துழைப்பு தேவை என்றும் நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பகதூர் தாபா எச்சரித்துள்ளார். காத்மாண்டுவில் நேபாளச் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டுக்கான நிறுவனம் (NIICE) நடத்திய உயர்மட்டக் கருத்தரங்கில் பேசிய பகதூர் தாபா இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தெற்காசியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் குறித்த விவாதிக்க நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு பிராந்திய வல்லுநர்களும் பங்கேற்றனர்.
இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத சம்பவங்கள் பெரும்பாலும் நேபாளத்திலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட தாபா, இது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டார். பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகச் சாடிய தாபா, ஆசிய நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாகிஸ்தானே முக்கிய தடையாக உள்ளதாகவும் விமர்சித்தார்.
தீவிரவாத நிதியை தடுக்கணும்
தெற்காசியா நாடுகளிடையே தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான அவசியம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. தீவிரவாத நடவடிக்கைக்குத் தேவையான நிதி செல்வதைத் தடுக்கும் வகையில் பணமோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தப்பட்டது. ஆசிய நாடுகளிடையே உளவுத் தகவல்களைப் பகிர்வது மற்றும் ஒருங்கிணைந்த எல்லை ரோந்து, குறிப்பாக இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தியா நேபாள எல்லை
இந்தியாவும் நேபாளமும் 1,751 கி.மீ நீளமுள்ள ஓபன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இது சர்வதேச அளவில் மிகக் குறைந்த பாதுகாப்பு கொண்ட எல்லையாக இருக்கிறது. இதனால் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் எளிதாக ஊடுருவும் ஆபத்து ஏற்படுகிறது. நேபாள ஆவணங்களை ஈஸியாக போலியாகத் தயாரித்து, அதன் பின்னால் தீவிரவாதிகள் மறைக்கின்றனர். கடந்த காலங்களில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேபாளத்தின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த போது கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏன் சிக்கல்
உதாரணமாக 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம். அந்த விமானம் காத்மாண்டிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய விமானம்.. காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தான் கடத்தல்காரர்கள் ஆயுதங்களுடன் ஏறினர். காத்மாண்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக உள்ளது.
இதனால் இரு நாட்டு எல்லைகளில் பாதுகாப்பைச் சற்று அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில் நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பகதூர் தாபாவும் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications