நேபாளத்தின் அடுத்த பிரதமர் இவரா? இந்தியாவில் படித்தவர்.. யார் இந்த பலேன் ஷா? பின்னணி
காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால் அந்த நாடு முழுவதிலும் உச்சக்கட்ட பதற்றம் நிலவியுள்ளது. அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த பிரதமர் (Nepal's Next Prime Minister) யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் இந்தியாவில் படித்தவரான பலேந்திர ஷா தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
நேபாளத்தில் நடைபெற்ற போராட்டம் கையை மீறி சென்ற நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேபாளத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறி தீவிர போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த பிரதமர் யார்?
சமூக வலைத்தள தடைக்காக மட்டும் எங்களின் போராட்டம் இல்லை என்பது போராட்டத்தை முன்னெடுத்துள்ள இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது. ஷர்மா ஒலி ராஜினாமா செய்துள்ள நிலையில், நேபாளத்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது காத்மாண்டு நகர மேயராக இருக்கக்கூடிய பலேந்திர ஷா தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். சமூக வலைத்தள தடையை நேபாள அரசு நீக்கியதும் அங்கு சமூக ஊடகங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அப்போது இருந்தே பலேன் ஷாவிற்கு ஆதரவாக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு நேபாளத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள நபராக மாறியிருக்கிறார் பலேன் ஷா.
சிவில் இன்ஜினியரிங் படித்தார்
பலேன் என்று அழைக்கப்படக்கூடிய பலேந்திர ஷா, காத்மாண்டு நகரின் மேயராக இருக்கிறார். காத்மாண்டுவில் 1990 ஆம் ஆண்டு பிறந்த பலேன் ஷா, சிவில் இன்ஜினியரிங் படித்தார். பின்னர் இந்தியாவில் உள்ள விஸ்வேஸ்வரயா டெக்னலாஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்தார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பாக நேபாளத்தில் ராப் இசை பாடகராகவும், ஹிப் ஹாப் இசை பாடகராகவும், பாடலாசிரியராகவும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். தனது இசை நிகழ்ச்சி மூலமாகவே ஊழல், சமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அடிக்கடி எழுப்பி வந்தார்.
நாடு முழுக்க கவனம் பெற்றார்
கடந்த 2022 ஆம் ஆண்டு காத்மாண்டு மேயர் தேர்தலில் பலேன் ஷா சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். 61 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வாக்குகளுடன் வெற்றி பெற்ற பலேன் ஷா, நேபாளத்தில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகளின் வேட்பாளர்களை வீழ்த்தி நாடு முழுக்க கவனம் பெற்றார்.
மேயர் ஆன பிறகும்
சபினா கஃபேல் என்பவரை திருமணம் செய்துள்ள பலேன் ஷா, மேயராக ஆன பிறகும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து அடிக்கடி பேசிவந்தார். தற்போது நேபாள பிரதமராக இவரையே ஆக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக அங்குள்ள ஜென் இசட் தலைமுறை, அதாவது 2K கிட்ஸ் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications