அடுத்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் நேபாளம்.. குடியுரிமை சட்டத்தில் கை வைக்கிறது.. பகீர் முடிவு!
காத்மண்டு: நேபாளத்தின் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
இந்தியா நேபாளம் இடையே சண்டை நாளுக்கு நாள் முற்றி வருகிறது. நேபாளத்தின் இந்த திடீர் எழுச்சிக்கு பின் சீனா இருப்பதாக சந்தேகங்கள் எழுகிறது.
இந்தியாவிற்கு எதிராக நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை கூட வெளியிட்டு இருக்கிறது. இதனால் சண்டை அதிகம் ஆக தொடங்கி உள்ளது.

இடம் எது
இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டு அதற்கு அனுமதி பெற்று உள்ளது. லிபுலேக் பகுதியில் இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இங்கு கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.

குடியுரிமை சட்டம்
இந்த நிலையில் நேபாளத்தின் குடியுரிமை சட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் நேபாளிகளை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தற்போது உடனடியாக குடியுரிமை வழங்கப்படும். அதாவது திருமண சான்றிதழ் இருந்தால் உடனே நேபாளிகளை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு பெண்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்

மாற்ற முடிவு
ஆனால் இனி வரும் நாட்களில் அதை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி நேபாளிகளை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள் உடனடியாக அங்கு குடியுரிமை பெற முடியாது. அவர்கள் மொத்தம் 7 வருடம் காத்திருக்க வேண்டும். 7 வருடம் கழித்துதான் நேபாளிகள் திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு பெண்களுக்கு குடியுரிமை கிடைக்கும்.

நேபாள அரசு
இந்தியாவை பார்த்து இந்த மாற்றத்தை செய்ய உள்ளதாக நேபாளத்தின் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவும் இதேபோல் திருமணம் ஆனவர்களுக்கு 7 வருடத்திற்கு பின்தான் குடியுரிமை வழங்குகிறது.அதைதான் நாங்களும் செய்கிறோம் என்று கூறியுள்ளது. ஆனால் இந்தியாவின் அந்த குடியுரிமை சட்டத்தில் நேபாளத்திற்கு ஸ்பெஷல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியேற நேபாளிகள் 7 வருடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

முழுக்க முழுக்க எதிர்ப்பு அரசியல்
முழுக்க முழுக்க இந்த மாற்றம் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள். இந்தியாவை சேர்ந்த பீகாரி பெண்கள் பலர் நேபாளத்தில் இப்படி திருமணம் செய்து கொள்வது வழக்கம். எல்லையில் இருக்கும் மக்கள் இப்படி திருமணம் செய்து கொள்வது வழக்கம். தற்போது அதை தடுக்கும் வகையில் நேபாளம் செயல்பட்டு உள்ளது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது.

படைகள் குவிப்பு
இந்தியாவிற்கு எதிரான மேப் விட்ட நேபாளம் தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க தொடங்கி உள்ளது. இதற்காக எல்லையில் நேபாளம் படைகளை குவித்து வருகிறது. அங்கு இந்தியாவின் கட்டுமான பணிகளை நேபாளம் தடுக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் நேபாளம் தற்போது தனது குடியுரிமை சட்டத்தை மாற்ற துணிந்து உள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications