முகம் முழுக்க ரத்தம்.. நேபாளத்தில் மாஜி பிரதமர் மீது கொலை வெறி தாக்குதல்.. உண்மையில் என்ன நடக்கிறது
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே மிக மோசமான வன்முறை நடந்து வருகிறது. அங்கு சமூக வலைத்தள தடைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் வன்முறை சூழல் நிலவுகிறது. இதற்கிடையே அந்நாட்டின் மாஜி பிரதமர் டியூபாவை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். முகத்தில் ரத்தம் வழிய அவர் இருக்கும் காட்சிகள் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அந்நாட்டு அரசு 26 சமூக வலைத்தளங்களுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதித்திருந்தது. அந்த தடையை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடந்தது. நிலைமை மோசமானதால் 26 சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றது.

நேபாள போராட்டம்
ஆனாலும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அந்த போராட்டம் திடீரென முழு வன்முறையாக மாறிவிட்டது. கண்ணில் கண்ட இடங்களை எல்லாம் அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், மோசமான வன்முறையிலும் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக அங்கு வன்முறையாகத் தொடர்ந்தது. அங்கு உச்சக்கட்ட பதற்றமான ஒரு சூழலே நிலவுகிறது.
இச்சூழலில், முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா மற்றும் அவரது மனைவியும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ரானா டியூபா உள்ளிட்ட அரசியல்வாதிகளும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். காத்மாண்டுவில் உள்ள புடானில்கந்தாவில் அமைந்துள்ள டியூபாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
முகம் முழுக்க ரத்தம்
தாக்குதலுக்குப் பிறகு டியூபாவின் முகத்தில் ரத்தம் வழிய, அவர் ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகின. அதிகாரிகள் வந்து டியூபாவையும் அவரது மனைவியையும் மீட்பதற்கு முன்பே, அவர்களது வீடு சூறையாடப்பட்டது. நேபாளத்தில் நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
ஜென் Z எனப்படும் இளைய தலைமுறைப் போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள், காத்மாண்டு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் தீவைப்பு மற்றும் நாசவேலைகளாக மாறின. முதலில் சமூக வலைத்தள தடை காரணமாகத் தொடங்கிய போராட்டம், பிறகு நேபாளத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகச் சொல்லித் தொடர்ந்தது.

மிக மோசமான தாக்குதல்
அப்போது ஆத்திரமடைந்த சில போராட்டக்காரர்கள் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். நாடாளுமன்ற வளாகத்திற்கும் தீ வைத்தனர். மேலும், வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. அங்கிருந்த கட்சி அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது.
நேபாளத்தில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடுமையான எதிர்ப்பின் காரணமாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை..
களமிறக்கப்பட்ட ராணுவம்
அதேபோல நிதி அமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடல் காத்மாண்டு தெருக்களில் துரத்தி துரத்தித் தாக்கப்பட்டார். போராட்டக்காரர்கள் அமைச்சரை எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். போலீசார் எவ்வளவு முயன்றும் அங்கு நிலைமையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. இதனால் அங்குப் போராட்டங்களைச் சமாளிக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட வன்முறைச் சம்பவங்கள் முழுமையாக முடிவுக்கு வர சில நாட்கள் வரை ஆகும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications