அமெரிக்காவின் துரோகம்.. கனடா ஒருபோதும் மறக்காது! தேர்தல் வெற்றிக்கு பின் மார்க் கார்னி ஆவேசம்
ஒட்டாவா: கனடா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மார்க் கார்னி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, அவர் கனடா மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அமெரிக்காவையும் கடுமையாக சாடினார். "கனடாவை சொந்தமாக்கும் நோக்கத்துடன் நம்மை உடைக்க டிரம்ப் முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது" என்றும் பேசினார்.
வட அமெரிக்க நாடுகளில் ஒன்று கனடா. இந்த நாட்டில் கடந்த 2015 முதல் பிரதமராக இருந்த ட்ரூடோவிற்கு அவரது சொந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, பிரதமர் பதவியை கடந்த ஜனவரியில் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.

அதாவது, உள்நாட்டு பிரச்சினை, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து கனடா மீதான வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 14ஆம் தேதி அவர் 24 ஆவது பிரதமராக பதவி ஏற்ற நிலையில் அக்டோபர் மாதம் வரை கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருக்கிறது. எனினும், முன்கூட்டியே தேர்தல் நடத்த ஏதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிரதமருக்கான போட்டியில் லிப்ரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் உள்ள நிலையில், துவக்கம் முதலே மார்க் கார்னி முன்னிலை வகித்தார். கனடாவில் ஆட்சியைப் பிடிக்க மொத்தமுள்ள 343 இடங்களில் 172 இடங்களைப் பெற வேண்டும், ஆனால் ஆளும் லிபரல் கட்சி 164 இடங்களில் முன்னணியில் இருக்கும் நிலையில், கன்சர்வேடிவ் கட்சியினர் 147 இடங்களில் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடும் போட்டிக்கு இடையே, தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி, கனடா பிரதமராக மார்க் கார்னி மீண்டும் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. கனடா பிரதமர் தனது வெற்றியை அடுத்து நிகழ்த்திய உரையில், கனடாவிற்கு சவாலான நாட்கள் காத்திருப்பதாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- -
"வரும் நாட்கள் கனடா மக்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். அதேவேளையில், நமது தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதன் மூலம் இந்த தியாகங்களை நம் பகிர்ந்து கொள்வோம். அமெரிக்கா செய்த துரோகத்தின் பாடங்களை ஒருபோதும் கனடா மறக்க கூடாது. இந்த வர்த்தக போரில் நாம் வெற்றி பெறுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications