நைஜீரியா: 27 பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற போகோ ஹராம் தீவிரவாதிகள்
மைடுகுரி: நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 27 பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
நைஜீரியா நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பு போகோ ஹராம். இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்கள் மற்றும் ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த புதனன்று காபோர் என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள், எதிர்ப்பட்ட அப்பாவி பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் 6 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் இருந்து அக்கிராமத்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே, மீண்டும் வியாழன்று தாக்குதல் நடத்தியுள்ளனர் தீவிரவாதிகள்.
இந்த இரண்டாம் தாக்குதலில் சிக்கி சுமார் 21 மக்கள் பலியாகியுள்ளதாக கிராம அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து நடைப்பெற்ற இந்தக் கொடூர தாக்குதல்களில் சிக்கி மொத்தம் 27 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசு தகுந்த உதவிகள் செய்து வருகிறது. மேலும் அடுத்தடுத்து நடத்தப் பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து அந்நாட்டு உளவுதுறை தீவிர விசாராணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications