வடகொரியாவில் 99.93% வாக்குகள் கிம் கட்சிக்கு தான்! அப்போ மீதி 0.07% வாக்கு யாருக்கு போச்சு தெரியுமா
பியாங்யாங்: வடகொரியாவில் சமீபத்தில் தான் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்பார்த்தபடி கிம் கட்சி தான் வென்றது. அவரது கட்சிக்கு 99.93 சதவீதத்தை வாக்குகள் கிடைத்தாலும் கூட, வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சியில் கிம்மிற்கு எதிராகப் போன வாக்குகள் யாருக்குப் போனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இதற்கான பதிலையும் வடகொரியத் தேர்தல் முறையையும் நாம் பார்க்கலாம்!
வடகொரிய ஒரு சர்வாதிகார நாடு என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயரளவில் தேர்தல் நடத்தப்படும். அதன்படி சமீபத்தில் வடகொரியாவில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வழக்கம் போல வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் கிட்டத்தட்ட முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளார்.

வடகொரிய தேர்தல்
அவரது ஆளும் கொரிய தொழிலாளர் கட்சியும் கூட்டணி தான் தேர்தலில் வென்றது. அவர்கள் மொத்த வாக்குகளில் 99.93 சதவீதத்தைப் பெற்றுள்ளன. மார்ச் 15ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தல், 15வது உச்ச மக்கள் சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்தலாகும்.. இந்த தேர்தலில் வடகொரியா சட்டப்படி 17 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் ஆளும் தரப்பின் ஆதரவுடன் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்தது. 99.93% முதல் 99.97% வரை மக்கள் அதிபர் கிம்மின் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அங்கு மொத்தம் 99.99% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த நிலையில், அதில் கிட்டத்தட்ட அனைத்துமே கிம் கட்சிக்குப் போய் இருக்கிறது. சுமார் 0.0037 சதவீதத்தினர் வெளிநாடுகளில் இருந்ததால் அல்லது வடகொரியக் கடற்படையில் பணிபுரிந்ததால் வாக்களிக்கவில்லை. 0.00003 சதவீத மக்கள் மட்டுமே வாக்களிப்பதைத் தவிர்த்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
யாருக்கு போனது
வடகொரியா ஒரு சர்வாதிகார நாடு.. கிம் நினைப்பது தான் நடக்கும். அவர் உத்தரவிட்டால் விசாரணையே இல்லாமல் கூட மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். அப்படி இருக்கும்போது, எப்படி 0.07 சதவீத வாக்குகள் அவருக்கு வாக்களிக்கவில்லை என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். மேலும், அந்த வாக்குகள் யாருக்குச் சென்றிருக்கும் என்ற சந்தேகமும் வரலாம். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. ஏனென்றால் அங்கு எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை. அப்படி என்றால் யாருக்கு அந்த 0.07% வாக்குகள் போனது. அதாவது ஒவ்வொரு தொகுதியிலும், வாக்காளர்களுக்கு ஒரு முன் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் மட்டுமே வழங்கப்படுவார். அவரை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ மட்டுமே வாக்காளர்களால் முடியும். மாற்று நபர்களைத் தேர்வு செய்ய முடியாது. எனவே, இந்த 0.07% வாக்குகள் என்பது வேறு எந்த கட்சி அல்லது தலைவருக்கும் செல்லவில்லை. மாறாக, அதிகாரப்பூர்வ வேட்பாளர் வேண்டாம் என்று இவர்கள் வாக்களித்தாக பொருளாகும்.
இதுவே முதல்முறை
இதில் விஷயம் என்னவென்றால் கடந்த காலங்களிலும் குறிப்பிட்ட சதவிகித மக்கள் வாக்காளர்களை நிராகரித்து இருப்பார்கள். ஆனால், அதை வடகொரியா பொதுவெளியில் அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். 1957க்கு பிறகு இதுபோல வேட்பாளரைக் குறிப்பிட்ட சதவிகித மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதை வடகொரியா ஒப்புக்கொண்டதே இல்லை.
வடகொரியா தேர்தல் விதிகளின்படி, தொழிலாளர்கள், விவசாயிகள், வல்லுநர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 687 பிரதிநிதிகள் உச்ச மக்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் கிம் தலைமையிலான ஆளும் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருப்பார். வாக்காளர்களுக்கு அந்த வேட்பாளரை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது மட்டுமே தேர்வாக இருக்கும்.
கிம் ஜாங்
தனது தந்தை கிம் ஜாங் இல் 2011இல் காலமானதைத் தொடர்ந்து தற்போதைய அதிபர் கிம் ஜாங் அதிகாரத்திற்கு வந்தார். அன்றிலிருந்து அவர் நாட்டின் உச்ச அதிகாரியாக இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டில், வடகொரியா அரசியலமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இது அதிபர் கிம்மின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது. கிம் அதிகாரப்பூர்வமாக நாட்டின் தலைவராக ஆக்கப்பட்டதோடு, அரசு நிர்வாகம், ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அவருக்கு மட்டுமே முழு கட்டுப்பாடு இருக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications