டைம் பார்த்து அடித்த கிம் ஜாங் உன்! வட கொரியா செய்த சம்பவம்.. ரொம்ப டேஞ்சர்தான் போல!
பியாங்யாங்: மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பஞ்சாயத்தை அமெரிக்கா கூட்டி வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில், வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்து பார்த்திருக்கிறது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான சின்போ நகருக்கு அருகிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன. உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 6:10 மணியளவில் ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஏவுகணை சோதனை
பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டதாகத் தெரிகிறது. இது இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் 7-வது ஏவுகணைச் சோதனையாகும். ஏப்ரல் மாதத்தில் மட்டும் இது 4-வது சோதனையாகும். ராணுவ ஆய்வாளர்கள் மற்றும் தென்கொரிய உளவுத்துறையின் முதற்கட்ட தகவல்களின்படி, இதில் வடகொரியாவின் மேம்படுத்தப்பட்ட 'புக்கக்சோங்' ரக ஏவுகணைகள் அல்லது புதிய வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக 'சின்போ' பகுதி வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான தளம் என்பதால், இது SLBM எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
புது டெக்னாலஜி
இந்த ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது கடலுக்கு அடியில் உள்ள நகரும் தளங்களில் இருந்து ஏவப்படுவதால், எதிரி நாடுகளின் ரேடார்களால் முன்கூட்டியே இதைக் கண்டறிவது மிகவும் கடினம். இந்த ஏவுகணைகளில் திரவ எரிபொருளுக்கு பதில், திட எரிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வகை ஏவுகணைகளை, மிக விரைவாகத் தயார் செய்து ஏவ முடியும்.
ஜப்பான் காலி
இன்று ஏவப்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவை 500 கி.மீ முதல் 1500 கி.மீ வரை பாய்ந்து சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் தென்கொரியா மற்றும் ஜப்பானின் முழுப் பகுதியையும் வடகொரியாவால் குறிவைக்க முடியும். இந்த வகை ஏவுகணைகளில் சிறிய அளவிலான அணு ஆயுதங்களை பொருத்தி ஏவும் வகையில் வடகொரியா வடிவமைத்துள்ளது.
மெசேஜ் சொல்லும் வட கொரியா
சின்போ பகுதியிலிருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணம், இங்கு வடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலிமையின் இதயம் போன்றது. இங்கு நடத்தப்படும் சோதனை, அந்த நாடு கடலுக்கு அடியிலிருந்தும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறனைப் பெற்றுவிட்டதை உலகிற்கு உணர்த்துகிறது.
வரும் மே மாதம் சீன அதிபரை டிரம்ப் நேரில் சந்திக்கிறார். இதற்கு முன்னதாக, "நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு, எங்களை அலட்சியப்படுத்த முடியாது" என்ற மெசேஜ்-ஐ டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு வடகொரியா இதன் மூலம் சொல்ல முயல்கிறது என்றும், ஈரானை போல எங்கள் மீது எளிதாக தாக்குதல் நடத்திவிட முடியாது என்றும் வடகொரியா தெளிவுப்படுத்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.














Click it and Unblock the Notifications