போரை நிறுத்த வேண்டும்.. ஈரானை வலியுறுத்தும் ஓமன்! பேச்சுவார்த்தைக்கு திரும்ப வலியுறுத்தல்!
தெஹ்ரான்: ஈரான் போர் காரணமாக, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் பேசிய ஓமன் வெளியுறவு அமைச்சர் சையித் பத்ர் அல் புசைதி, உடனடியாகப் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஓமன் வெளியுறவு அமைச்சர் சயீத் பத்ர் அல்புசைதியை, ஈரான் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்பாஸ் அராக்ஷி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, டாக்டர் அராக்ஷி, தற்போதைய நெருக்கடியைத் தணித்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரப் பாதைக்கு திரும்புவதற்கு ஓமன் சுல்தானகம் ஆற்றிவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பையும், அதன் தொடர்ச்சியான முயற்சிகளையும் பெரிதும் பாராட்டினார்.
அமைதிக்கு அழைப்பு விடுக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிலைப்பாட்டையும் டாக்டர் அராக்ஷி தெரிவித்தார். தனது நாட்டின் மீதான இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலே பிராந்தியத்தில் பதற்றம் மற்றும் பீதி அதிகரிப்பதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். பதற்றத்தைக் குறைத்து அமைதியை மீட்டெடுப்பதற்கான ஈரான் தயாராக இருப்பதை அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சயீத் பத்ர், ஓமன் சுல்தானகம் தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவை: உடனடிப் போர் நிறுத்தம், நடந்துவரும் மோதலை இராஜதந்திர ரீதியாகத் தீர்க்க மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புதல், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நியாயமான கோரிக்கைகளை அடைதல் ஆகியவைதான்.
ஓமன் வெளியுறவு அமைச்சர் அல்புசைதி, ஈரானைப் பொறுமையுடன் இருக்குமாறும், நல்ல அண்டை நாடுகளுக்கிடையேயான உறவுகளைச் சீர்குலைக்கும் அல்லது பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்த்து அமைதி காக்குமாறு வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications
