Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிடம் மோதாதே.. கொஞ்சம் இறங்கிபோ தம்பி! பாக்., பிரதமருக்கு நவாஸ் ஷெரீப் தந்த ஐடியா! பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ‛‛தம்பி தம்பி.. இந்தியாவிடம் மோத வேண்டாம். இந்தியாவிடம் மோதுவது நல்லது அல்ல. நான் எப்படி பதவி இழந்தேன் என்று தெரியும் அல்லவா'' என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பாடம் எடுத்துள்ளார் அவரது அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப். அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றால் மோதலை கைவிட்டு விட்டு அண்ணன் சொல்வதை செய் என்று முக்கிய அட்வைஸ் வழங்கியுள்ளார். நவாஸ் ஷெரீப் யார்? இந்தியாவிடம் மோதி எப்படி பதவியை இழந்தார்? இந்தியாவிடம் மோதலை தவிர்க்க தம்பியான பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கு என்ன அட்வைஸ் செய்தார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை, ட்ரோன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நம் நாடு அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது.

operation-sindoor-nawaz-sharif-adviced-his-brother-pm-shehbaz-sharif-to-solve-india-pakistan-tens

வியாழக்கிழமை இரவில் பாகிஸ்தான் சார்பில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களை குறிவைத்து ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்கள் மூலம் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டது. அதனை நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் கண்டுபிடித்து வானிலேயே இடைமறித்து அழித்தது.

இப்போது பாகிஸ்தான் செய்வதறியாது தவித்து வருகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்து வருகிறார். நம் நாட்டை தாக்குவதற்கு போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லாதது, நாட்டின் மோசமான நிதி நிலைமை உள்ளிட்டவற்றால் தற்போது பாகிஸ்தான் இக்கட்டான சூழலில் உள்ளது. மேலும் பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மீது எதிர்க்கட்சியினர் மற்றும் மக்களின் கோபம் என்பது திரும்பி வருகிறது. இதனால் இந்த பிரச்சனைக்கு அவர் விரைவில் தீர்வு காண வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை அவரது உடன் பிறந்த அண்ணனும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் சந்தித்து பேசி உள்ளார். அப்போது இந்தியாவிடம் மோத வேண்டாம். மோதினால் பிரச்சனை என்பது பெரிதாகி விடும். இதனால் மோதலை கைவிட்டுவிட்டு இந்தியாவுடன் இணக்கமாக செல்வது தான் நல்லது என்றும் அவர் அட்வைஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக ‛தி எக்ஸ்பிரஸ் ட்ரிபூன்' செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் நவாஸ் ஷெரீஃப் லண்டனில் இருந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்சனை ஏற்பட்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக கூறிய உடன் அவர் பாகிஸ்தான் வந்தார். தற்போது அவர் தம்பி ஷெபாஸ் ஷெரீஃப்பை சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவுடனான பிரச்சனையை தூதரக உறவு வாயிலாக தீர்க்க வேண்டும். இதற்கு பிஎம்எல்-என் (ஷெபாஸ் ஷெரீஃப் கட்சி பெயர்) தலைமையிலான கூட்டணி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதுதான் பாகிஸ்தானுக்கு சிறந்ததாக இருக்கும். மாறாக இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷத்தை காட்ட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

இதனால் பாகிஸ்தான் இனி இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை கைவிட்டு தூதரகம் வழியாக பிரச்சனையை முடிக்க முயற்சி செய்யலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் இந்தியாவுக்கு எதிராக கார்கில் போருக்கு பின்னால் பிரதமர் பதவியை இழந்ததையும் எடுத்து கூறியுள்ளார். அதாவது கடந்த 1999ம் ஆண்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் தான் நவாஸ் ஷெரீஃப். அந்த போரில் பாகிஸ்தான் நம்மிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவரின் ஆட்சியை கவிழ்த்ததவர் யார் என்றால் மறைந்த முன்னாள் அதிபரும், ராணுவ தளபதியுமான பர்வேஷ் முஷ்ரஃப் தான்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போரை தலைமை தாங்கி நடத்தியவர் பர்வேஷ் முஷாரஃப். போரில் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத்தை வீழ்த்தி நம் நாட்டு ராணுவம் மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் கார்கில் போர் தோல்வியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக பர்வேஸ் முஷ்ரஃப் திருப்பினார். அமெரிக்காவின் பேச்சை நவாஸ் ஷெரீஃப் கேட்டு போரை முடக்கிவிட்டார். இல்லாவிட்டால் பாகிஸ்தான் வென்று இருக்கும் என்று மக்களிடம் கூறினார். மேலும் நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக ராணுவத்தை ஒன்றிணைந்து ராணுவ புரட்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் அதிபராக பர்வேஷ் முஷ்ரஃப் பொறுப்பேற்றார்.

இதனையும் தம்பி ஷெபாஸ் ஷெரீஃப்பிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் மோதி தோற்றால் ஆட்சி கூட கவிழலாம். இது பிரச்சனையாகும். எனவே தூதரக ரீதியாக பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரதமராக 1990 -1993, 1997 -1999, 2013-2017 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக செயல்பட்டுள்ளார். இவர் சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க கூடாது என்று பேசி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு தொடக்கத்தில், ‛‛இந்தியாவுடன் நல்ல உறவை பின்பற்ற வேண்டும். நான் பிரதமர் பதவியை இழந்ததற்கு முக்கிய காரணம் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மீறியது தான்'' என்று கூறினார்.

அதாவது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் 1999ம் ஆண்டு நடந்தது. ஆனால் அதற்கு முன்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை நவாஸ் ஷெரீஃப் மீறி இருப்பார். அதாவது 1998 மே மாதம் 28 ம் தேதி பாகிஸ்தான் 5 அணுஆயுத சோதனைகளை செய்தது. இதையடுத்து அப்போதைய நம் நாட்டின் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் சென்று ஒப்பந்தம் மேற்கொண்டார். லாகூர் உடன்படிக்கை என்று இது அழைக்கப்பட்டது. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் கூடாது. அமைதியை பேண வேண்டும் என்பது தான் இந்த உடன்படிக்கையின் சாராம்சமாக இருந்தது.

ஆனால் 1999ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்துக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் நுழைந்தனர். இது மோதலாக மாறி கார்கில் போர் வந்தது. அதில் பாகிஸ்தான் வீழ்த்தப்பட்ட நிலையில் நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவி மற்றும் ஆட்சியை ராணுவ தளபதி பர்வேஷ் முஷ்ரப்பிடம் பறிகொடுத்தார்.இதனை தான் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான ஷெபாஸ் ஷெரீஃப்பிடம், அண்ணன் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாகிஸ்தான் நம்மிடம் மோதாமல் பேச்சுவார்த்தைக்கு முயலலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+