கல்வி விசாவில்.. கனடாவுக்குள் நுழையும் இந்திய மாணவர்கள்! இப்படியெல்லாம் பண்ணலாமா? வெளியான ஷாக் தகவல்
ஒட்டாவா: கல்வி பயில்வதாக கூறி கனடாவுக்கு விசா எடுத்து செல்லும் மாணவர்கள் பலர், முறையாக கல்வி நிலையங்களுக்கு போவதில்லை என்று அந்நாட்டு அரசு கூறுகிறது. இப்படி விசா விதிகளை மீறுபவர்களில் இந்தியர்கள்தான் அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை, கல்வி விசா விதி மீறல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. இந்த தகவல்கள் கனடா எம்பிக்கள் குழுவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

விதி மீறல்களில் ஈடுபட்ட மாணவர்கள் பற்றி கனடாவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அதிகாரி ஆயிஷா ஜாஃபர் கூறுகையில், "மொத்தம் 47,175 மாணவர்கள் விதிமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த மாணவர்கள் கல்வி விசாவில் கனடாவுக்குள் நுழைகின்றனர். ஆனால் இவர்கள் வகுப்புகளில் பங்கேற்பதில்லை. 47,175 மாணவர்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இருப்பினும், அதிகமானவர்களாக இந்தியர்கள்தான் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த தரவுகள் பெரும்பாலும் கனடாவின் உயர்கல்வி நிறுவனங்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளுக்குச் வருவதை நிறுத்தும் போது அந்த கல்வி நிறுவனங்கள், குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் பின்னர் கனடா எல்லை சேவைகள் முகமைக்கு அமலாக்க நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படுகின்றன.
விசா நிபந்தனைகளை மீறும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையைத் தீர்மானிப்பது சவாலானது என்று ஜாஃபர் குறிப்பிட்டுள்ளார். "கனடாவில் உள்ள எந்த வெளிநாட்டவரும் கனடா எல்லை சேவைகள் முகமையின் அதிகார வரம்பிற்குள் வருவார்கள். எனவே, அவர்களுக்கு ஒரு உள்நாட்டு விசாரணை குழு உள்ளது" என்றும் கூறியுள்ளார்.
குடியுரிமை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 50,000 வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கவில்லை. இவர்களில் 19,582 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீனாவை சேர்ந்தவர்கள் 4,279 பேர் உள்ளனர்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கொடுக்கும் சலுகைகள்
மற்ற நாடுகளை போல கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்று பெரியதாக பணப்பலன்களை சலுகையைாக வழங்குவதில்லை. ஆனால், படிப்பதற்கும், பணிபுரிவதற்கும், குடியேறுவதற்கும் சலுகைகளை வழங்குகிறது. கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வாரம் 20 மணி நேரம் வரை வெளியில் வேலை செய்துக்கொள்ளலாம். இதுவே விடுமுறை எனில், முழுமையாக பணியாற்றலாம். கனடாவில அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பட்டம் பெற்ற மாணவர்கள் 8 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கி வேலை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
மட்டுமல்லாது கனடாவில் படித்து பட்டம் பெற்று, வேலை செய்துவரும் வெளிநாட்டு மாணவர்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி திட்டத்தின் மூலம் நிரந்தர குடியுரிமையை பெற விண்ணப்பிக்கலாம். இதுவே அந்நாட்டு அரசு, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் அதிகபட்ச சலுகையாகும். ஒருவேளை மாணவருக்கு திருமணமாகியிருக்கிறது எனில், அவர் தனது மனைவி/கணவர் ஆகியோரை கனடாவுக்கு அழைத்து வரலாம். அவர் வேலை செய்ய விசா கிடைக்கும். குழந்தை இருப்பின் அக்குழந்தைக்கு இலவச கல்வியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications