8000 அமெரிக்கர்களின் பெயர்கள் அடங்கிய ஐஎஸ் தீவிரவாதிகளின் மெகா "ஹிட் லிஸ்ட்"!
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய ஹிட் லிஸ்ட்டில் கிட்டத்தட்ட 8000அமெரிக்கர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் அமெரிக்கர்கள் தவிர கனடா நாட்டவர், ஆஸ்திரேலியர்கள், ஐரோப்பியர்களும் இடம் பெற்றுள்ளனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான சைபர் காலிபேட் ஹேக்கர் குரூப் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 8318 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள் ஆவர்.

இவர்களின் பெயர்கள், முகவரிகள், தொடர்பு எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அவர்களின் முக்கிய தகவல் தொடர்புகளை ஹேக் செய்து இந்த விவரங்களை எடுத்து இந்தக் குரூப் வெளியிட்டுள்ளது. முஸ்லீம்களுக்காக இவர்களைப் பின் தொடர்ந்து கண்காணித்துக் கொல்லுங்கள் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு வெளியிட்டுள்ள மிகப் பெரிய ஹிட் லிஸ்ட் இதுவாகும். இதற்கு முன்பு இவ்வளவு நீளமான ஹிட் லிஸ்ட் வந்ததில்லை என்பதால் இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவரக்ளில் 7848 பேர் அமெரிக்கர்கள் ஆவர். 312 பேர் கனடியர்கள். 39 பேர் இங்கிலாந்துக்காரர்கள். 69 பேர் ஆஸ்திரேலியர்கள்.
ஆட்கள் தவிர தாக்கப்பட வேண்டிய நகரங்களின் வரிசை ஒன்றையும் அப்பட்டியல் உள்ளடக்கியுள்ளது. அதில் பெல்ஜியம், பிரேசில், சீனா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கவுதமாலா, இந்தோனேசியா, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜமைக்கா, நியூசிலாந்து, டிரினிடாட் டொபாகோ, தென் கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகளில் இந்த பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது. வோகடிவ் என்ற மீடியா நிறுவனம் இந்தப் பட்டியல் குறித்து முதலில் செய்தி வெளியிட்டுள்ளது. அதை மேற்கோள் காட்டி டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications