"புல்வாமா தாக்குதலில் தொடர்பு இருக்கு.." ஒப்புக்கொண்ட பாக். மார்ஷல்! பக்கத்திலிருப்பது யார் தெரியுமா
இஸ்லாபமாத்: கடந்த 2019ல் புல்வாமாவில் நமது துணை ராணுவப்படையினர் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா கூறி வந்த நிலையில், அதை பாகிஸ்தான் இதை காலம் திட்டவட்டமாக மறுத்தே வந்தது. இதற்கிடையே இப்போது இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனது தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்தது. இந்தியாவின் பல பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அதை முறியடித்த இந்தியா திருப்பி பதிலடி கொடுத்தது. அதைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் உடனே மோதலை நிறுத்தலாம் எனத் தூதுவிட்டது. இந்தியாவும் அதை ஒப்புக்கொள்ளவே மோதல் முடிவுக்கு வந்தது.

ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
இதற்கிடையே பிரஸ் மீட் ஒன்றில் பேசும்போது பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி புல்வமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானிடம் இந்தியா சண்டை வேண்டாம் எனச் சொல்லித் தூதுவிட்ட நிலையில், செய்தியாளர் சந்திப்பில் அது தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசியபோது அவர் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.
புல்வாமா தாக்குதல்
கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 துணை ராணுவப் படையினர் சென்ற வாகனத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் வாகனத்தில் பயணித்த வீரர்கள் கொல்லப்பட்டனர். கோழைத்தனமாக நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் நமது வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா தொடர்ந்து கூறி வந்தது. இருப்பினும், அதை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், இப்போது அவர்களின் பாதுகாப்புப் படையே அதை ஒப்புக்கொண்டுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலைக் குறிப்பிட்டு அது பாகிஸ்தானின் ராணுவ தந்திரத்தைக் காட்டுவதாக அவர் சொல்லியுள்ளார். அந்த பிரஸ் மீட்டில் வெளிநாட்டு நிருபர்கள் உட்படப் பல ஊடகவியலாளர்கள் இருந்த நிலையில், அனைவர் முன்னிலையிலும் இந்த அதிர்ச்சி பதிலைக் கூறியிருக்கிறார்.
சர்ச்சைப் பேச்சு
இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பின் போது ஏர் வைஸ் மார்ஷல் ஔரங்கசீப் அகமது கூறுகையில், "பாகிஸ்தானின் வான்வெளி, நிலம், நீர்நிலைகள் அல்லது அதன் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், எந்தச் சமரசமும் செய்ய முடியாது. அதற்குத் தக்க பதிலடி இருப்போம். நாம் நம் தேசத்திற்குக் கடமைப்பட்டுள்ளோம். பாகிஸ்தான் மக்கள் தங்கள் ஆயுதப் படைகள் மீது வைத்திருக்கும் பெருமை மற்றும் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவோம்.
புல்வாமாவில் எங்கள் ராணுவ தந்திரத்தை வெளிப்படுத்த முயன்றோம்.. இப்போதும், எங்கள் ராணுவ தந்திரம் மற்றும் புத்திசாலித்தனத்தையும் நிரூபித்துள்ளோம். இதை மக்கள் கவனிக்க வேண்டும் என நினைக்கிறோம்" என்றார். அவர் இதுபோல சொன்ன போது அருகிலேயே அந்நாட்டின் டிஜி லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி மற்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரும் இருந்தனர். இருப்பினும், அவர்கள் யாரும் அதை மறுக்கக்கூட இல்லை.
பக்கத்தில் இருந்தது யார் தெரியுமா
இதில் பிரஸ் மீட்டில் அருகே உள்ள (பிரவுன் யூனிபார்ம்) லெப்டினன்ட் ஜெனரல் சவுத்ரி என்பவர் அணு ஆயுத விஞ்ஞானியான சுல்தான் பஷிருதீன் மஹ்மூத்தின் மகன் ஆவார். இந்த சுல்தான் பஷிருதீன் தான் முன்பு ஒரு காலத்தில் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சந்தித்து பயங்கரவாதிகளுக்கு அணு ஆயுதத் தர முயன்றார். மேலும், அவர் ஐநாவால் அறிவிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாதிகள் லிஸ்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அதை மறுக்கும் வகையில் அந்த நாட்டின் ஏர் மார்ஷலே பேசியிருக்கிறார். இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications