பாகிஸ்தான் திடீர் குண்டுவீச்சு.. ஆப்கானிஸ்தானில் 9 குழந்தைகள் உள்பட 10 அப்பாவிகள் பலி.. வெடிக்கும் போர்?
காபூல்: ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. இன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது குண்டு வீசியது. இதில் 9 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 10 பேர் பலியான நிலையில் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இதனால் கோபமாகி உள்ள தாலிபான்கள், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று வார்னிங் செய்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே போர் வெடிக்கிறதா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தாலிபான்கள் மது பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாலிபான்களும் பதிலடி கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் கூட இருநாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் வந்தது. ஆனால் அரபு நாடுகள் தலையிட்டு இருநாடுகளையும் அமைதிப்படுத்தின. இதையடுத்து எல்லையில் அமைதி திரும்பியது.
ஆனால் தற்போது மீண்டும் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் தான் காரணம். அதாவது இன்று திடீரென்று பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ட்ரோன் மற்றும் குண்டுகளை வீசி திடீரென்று ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ராணுவ விமானங்களில் நுழைந்தவர்கள் குண்டுகளை வீசி உள்ளனர்.
இதில் 9 குழந்தைகள், ஒரு பெண்கள் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள குனார் மற்றும் பக்திகா மாகாணம் உள்ளிட்ட இடங்களிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு 4 பேர் காயமடைந்துள்ளனர். இது இருநாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு தாலிபானின் செய்தி தொடர்பாளர் ஜபிஉல்லா முஜாகித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ பாகிஸ்தான் படையினர் குண்டு வீசியதில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 குழந்தைகள் (5 ஆண்கள், 4 பெண்கள்), ஒரு பெண் உள்பட மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்'' என்றார்.
அதேபோல் அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛பாகிஸ்தானின் விதிமீறிய தாக்குதல் நடவடிக்கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அதேவேளையில் எங்களின் வான் எல்லை, நிலப்பரப்பு மற்றும் பாதுகாப்பது எங்களின் உரிமையாகவும், கடமையாகவும் உள்ளது. இதனால் சரியான நேரத்தில் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது நேற்றைய தினம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பாகிஸ்தானின் பாரா மிலிட்டரி தலைமையகத்தில் நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்ட்டது. இதில் 3 அதிகாரிகள் இறந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலின் பின்னணியில் ஆப்கானிஸ்தான் இருப்பதாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற அமைப்பினர் தான் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று பாகிஸ்தான் சந்தேகித்தது. இந்த டிடிபி அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதையும், பாகிஸ்தான் ராணுவத்தையும் விரட்டியடிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதனால் பாகிஸ்தானுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தான் தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இருநாடுகள் இடையே அதிகரித்துள்ள பதற்றத்தால் போர் அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications