காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்! குடும்பத்தில் உள்ள 13 பேரையும் கொன்ற சிறுமி- அதிர வைக்கும் சம்பவம்
இஸ்லாமாபாத்: 18 வயது கூட ஆகாத சிறுமி ஒருவர் தனது காதலைப் பெற்றோர் சம்மதிக்காததால் அவர்களைக் கொலை செய்துள்ளார். அந்த பெண் கோதுமையில் விஷம் கலந்த நிலையில், அதைச் சாப்பிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை எனச் சொல்வார்கள். ஆனால், சில சம்பவங்களைப் பார்க்கும் போது காதலுக்கு இரக்கம் கூட இருக்காது போல என்றே எண்ணத் தோன்றுகிறது.

காதலைக் காரணமாகச் சொல்லிப் பல மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. அப்படியொரு கொடூர சம்பவம் தான் இப்போது பாகிஸ்தானில் நடந்துள்ளது.. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பகீர்: இந்த கொடூர குற்றத்தைச் செய்த மைனர் சிறுமியை அந்த மாகாண போலீசார் கைது செய்தனர். காதலித்த இளைஞரை விருப்பப்படி திருமணம் செய்யப் பெற்றோர் சம்மதிக்காததால் அவர், விஷம் வைத்து தனது சொந்த குடும்பத்தையே சேர்ந்த 13 பேரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பாகிஸ்தானின் கைர்பூருக்கு அருகில் உள்ள ஹைபத் கான் ப்ரோஹி கிராமத்தில் கடந்த மாதம் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
அதாவது அந்த சிறுமி முதலில் தான் காதலிக்கும் இளைஞன் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இருப்பினும், அந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க குடும்ப உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி தனது குடும்பத்தினர் மீதே கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
கொலை: இது குறித்து அந்த சிறுமி தனது காதலனிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு இருவரும் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் விஷம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடியே அந்த சிறுமி குடும்பத்தினர் சாப்பிடும் உணவில் விஷயத்தைக் கலந்துள்ளார். இதைச் சாப்பிட்ட அனைவருக்கும் அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி தகவல்: இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், "வீட்டில் செய்யப்பட்ட உணவு தான் என்பதால் அவர்கள் வழக்கம் போலச் சாப்பிட்டுள்ளனர். இருப்பினும், விஷம் கலக்கப்பட்ட சாப்பாட்டைச் சாப்பிட்ட உடன் அனைவருக்கும் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை தரப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்
அவர்கள் மரணத்தில் சந்தேகம் இருந்ததால்.. பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தான் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்து இருந்தது தெரிய வந்தது" என்றார்.
விசாரணை: போலீசார் உடனடியாக விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது தான் அந்த சிறுமி இந்த கொடூரத்தைச் செய்தது தெரிய வந்தது. வீட்டில் ரொட்டி செய்யப் பயன்படுத்திய கோதுமையில் அந்த சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து விஷத்தைக் கலந்துள்ளார். இது தெரியாமல் அதில் ரொட்டி செய்து சாப்பிட்ட குடும்பத்தினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து அந்த சிறுமியை போலீசார் கைது செய்தனர். போலீசார் மேலும் கூறுகையில், "திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததே இந்த கொலைக்குக் காரணம். அந்த சிறுமி எவ்வளவோ சொல்லியும் பெற்றோர் கேட்கவில்லையாம். இதன் காரணமாகவே சிறுமி தனது குடும்பத்தினரையே கொன்று இருக்கிறார். காதலன் உதவியுடன் கோதுமையில் விஷம் கலந்ததை அந்த சிறுமி ஒப்புக்கொண்டார்" என்றார்.
பாகிஸ்தான் சட்டம்: நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானில் குறைந்தபட்ச திருமண வயது பெண்களுக்கு 18ஆகும். இது சட்டமாக இருந்தாலும் கூட, பெரும்பாலும் அதற்கு முன்பு மைனராக இருக்கும் போது திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications