Pakistan: இந்தியாவை பகைத்துக்கொண்டு.. ரூ.127 கோடி வருவாயை கோட்டை விட்ட பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உரசல்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. தற்போது வரை இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடிதான் வைத்திருக்கிறது. இதனால் அந்நாட்டுக்கு ரூ.127 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திய மறுநாள், பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளியை மூடியது. இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு இரண்டு மாதங்களில் 4.10 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் பார்த்தால் பாகிஸ்தான் ரூ.127 கோடி வருவாயை இழந்திருக்கிறது.

பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கான வான்வெளியை மூடியதால், ஏப்ரல் 24 முதல் ஜூன் 30, 2025 வரை இந்த இழப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 100 முதல் 150 இந்திய விமானங்கள் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் மொத்த வருவாய் 2019 இல் $508,000 ஆக இருந்த நிலையில், 2025 இல் அது $760,000 ஆக அதிகரித்துள்ளது.
வான்வெளி கட்டுப்பாடுகள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. "நிதி இழப்புகள் ஏற்பட்டாலும், இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை பொருளாதாரக் காரணங்களை விட முக்கியத்துவம் வாய்ந்தவை" என்று அந்நாட்டு நிதியமைச்சகம் கருதுவதாக டான் நாளிதழ் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக 2019 இல் வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு $54 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளது, மேலும் ஆகஸ்ட் மாதக் கடைசி வாரம் வரை இது மூடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதேபோல், இந்திய வான்வெளியும் மூடப்பட்டிருக்கும் என நம்முடைய மத்திய அரசு கூறியுள்ளது. இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாகவும், 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்குவதற்கு முன்னதாகவும், இந்தியா தூதரக உறவுகளைக் குறைத்தது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதுடன், வர்த்தகத் தடைகளையும் விதித்தது.
இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளியை மூடியது. இந்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு பில்லியன்கள் கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications