பாகிஸ்தான்: ’புது’ சம்பவம்- இந்திய எதிர்ப்பு பிரசாரகர் தாரீக் ஜமீல் மகன் சுட்டுக் கொலை- ISI அதிர்ச்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக தீவிர மதவெறுப்பு பிரசாரம் செய்து வந்த பிரசாரகர் தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் 172 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து வந்த அஜ்மல் கசாப் உள்ளிட்ட பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதலின் சதிகாரரான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில்தான் பதுங்கி உள்ளார். அண்மையில் ஹபீஸ் சயீத் மகன் கமாலுதீன் சயீத் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தானின் மத பிரசாரகரான தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மகன் உயிரிழந்த சம்பவத்தை தாரீக் ஜமீல் உறுதி செய்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ள தாரீக் ஜமீல், மகன் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துவிட்டார்; அவருக்கான அனைவரும் பிரார்த்தியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் கானேவால் மாவட்டம் துலம்பா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் அதிகாரி மியான் சனுன் சலீம் கூறுகையில், மவுலானா அஸீம் ஜமீல் நெஞ்சில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன; பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அஸீம் ஜமீல் மரணமடைந்துவிட்டார் என தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த மர்ம மரணம் தற்கொலையா? அல்லது மோதல் சம்பவத்தில் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்துகிறது பாகிஸ்தான் போலீஸ்.
மவுலானா தாரீக் ஜமீல் மகன் மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஸீம் ஜமீல் மரணத்துக்கு இரங்கல்களை குவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கு பேரதிர்ச்சியை தந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications