கடைசி பந்து வரை விளையாடுவேன்.. மோசமான சாதனை படைக்கப் போகும் இம்ரான் கான்.. கழற்றி விட்ட கூட்டணி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கு எதிராக வாக்களிப்பதாக கூறிய தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் இம்ரான்கானின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இம்ரான் ஒரு மோசமான சாதனையை படைக்க இருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை தடுப்பதற்காக எவ்வித முயற்சிகளையும் செய்யாத இம்ரான்கான் மீது இது தொடர்பாக குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

பிரதமர் இம்ரான் கான்
இதற்கு சம்மந்தப்பட்ட நோட்டீசை கடந்த 8ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதாக எதிர்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கூட்டணியை சேர்ந்த பிஎம்எல்க்யூ கட்சியும், இம்ரானின் தெஹ்ரிக் கட்சியை சேர்ந்த 25 எம்பிக்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் இம்ரான் ஈடுபட்டுள்ளார். இவர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால், இம்ரான் கான் ஆட்சியை இழக்க நேரிடும்.

முயற்சியில் பின்னடைவு
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கு எதிராக வாக்களிப்பதாகக் கூறிய தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் இம்ரான் கானின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பிரிவு 63-A ஐ செயல்படுத்த அனுமதி கோரி இம்ரான் தரப்பு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தபோது, பாராளுமன்றத்தில் தனது எதிர்ப்பாளர்களை நீக்கம் செய்யப்போவதாக கூறினார்.

ராஜினாமா செய்ய மாட்டேன்
"எந்தச் சூழலிலும் ராஜினாமா செய்ய மாட்டேன். கடைசி பந்து வரை விளையாடுவேன்.. அவர்களை ( கட்சி எம்பிக்களை) ஆச்சரியப்படுத்துவேன்,'' என இம்ரான் கான் கூறியிருந்தார். 30க்கும் மேற்பட்ட சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்த பிறகு, இம்ரான் கான் பதவியில் நீடிப்பதற்கு அவரது கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல வாரங்களாக நடக்கும் அரசியல் போரில் பாகிஸ்தான் இராணுவம் நடுநிலைமை வகிக்கும் நிலையில் மத அரசியலை கையில் எடுத்துள்ளார் இம்ரான் கான். ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் குர்ஆன் வசனத்துடன் தனது உரையைத் தொடங்கும் அவர், தற்போது "இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான சண்டையாகும், முஸ்லிம்கள் யாருடைய பக்கம் இருக்க வேண்டும் என்பதில் எந்த தெளிவும் இல்லை :" என கூறினார்.

ஆட்சியின் தலைவிதி
அரசியல் ரீதியாக, இம்ரான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன் ஒரு துருப்புச் சீட்டை வைத்திருக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது தலைவிதி கூட்டணி கட்சிகளான PML-Q, MQM-P மற்றும் பலுசிஸ்தான் அவாமி கட்சியை சார்ந்துள்ளது. இந்த மூன்று முக்கிய கூட்டணி கட்சிகளும் பின்வாங்க முடிவு செய்தால், அது அரசாங்கத்தின் முடிவாகவே இருக்கலாம். கட்சிகளின் 17 எம்எல்ஏக்கள் எந்த பக்கம் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் உள்ளது. சக்திவாய்ந்த பாதுகாப்பு சிப்பாய்களாக நம்பப்பட்ட அவர்கள், தற்போதைக்கு இம்ரான் கான் அரசாங்கத்திற்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்து வருகிறார்கள்

மோசமான சாதனை
பாகிஸ்தானில் இதுவரை எந்த ஒரு சிவிலியன் பிரதமரும் தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. அவர்களில் பெரும்பாலோர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக நீக்கப்பட்ட நிலையில், இரண்டு பிரதமர்களான யூசுப் ராசா கிலானி மற்றும் நவாஸ் ஷெரீப் நீதித்துறை நடவடிக்கை மூலம் நாற்காலியை இழந்தனர். ஆனால் இது வரை எந்தவொரு பிரதமரும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் நீக்கப்பட்டதாக வரலாறு இல்லை. ஒருவேளை இம்ரான் கானுக்கு எதிரான நம்பில்லா தீர்மானம் வெற்றி பெற்றால், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாட்டின் முதல் பிரதமர் என்ற மோசமான பெருமையை இம்ரான் பெறுவார்.












Click it and Unblock the Notifications