இனி பாகிஸ்தானில் தண்ணீருக்கு கூட பஞ்சம்? தூதுவிடும் பிரதமர் ஷெரீப்! இந்தியா தந்த தரமான பதிலடி! சபாஷ்
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள சூழலில், பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் உருவாகும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த எமர்ஜென்சி நிலையை உணர்ந்தே அந்நாட்டுப் பிரதமர் ஷெரீப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அழைப்பு மேல் அழைப்பு விடுத்து வருகிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
காஷ்மீரில் அப்பாவி மக்களைக் குறிவைத்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடத்தியது அனைவருக்கும் தெரியும். இது மட்டுமின்றி பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.

ஷெரீப் கோரிக்கை
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது டோனை மாற்றியிருக்கிறார். காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட எல்லா சிக்கல்கள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஷெரீப் கூறியிருக்கிறார்.. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவே ஷெரீப் விரும்புகிறார்.
ஆனால், பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை என ஒன்று நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மட்டுமே இருக்கும் என்றும் அந்த பிரச்சினையில் முடிவு எட்டப்படும் வரை வேறு எந்தவொரு விவகாரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்றும் இந்தியா திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
என்ன சொன்னார்
அதாவது சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஈரான் நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு தெஹ்ரானில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, காஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஷெஹ்பாஸ் கூறினார். அவர் காஷ்மீர் விவகாரம் எனச் சொன்னாலும் கூட உண்மையில் தண்ணீர் சிக்கல் அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது.
காரணம் என்ன
ஏனென்றால் பாகிஸ்தான் தனது தண்ணீர் தேவையில் பெரும்பகுதியைச் சிந்து நதி நீரையே நம்பி இருக்கிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. தற்போது நீரைத் தடுக்க நம்மிடம் போதுமான உள்கட்டமைப்பு இல்லை என்றாலும் கூட வரும் நீர்நிலைகளைக் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால் இன்னும் சில காலத்தில் சிந்து நதி நீரை நாமே அணைகளில் தடுத்து வைக்கலாம். இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறது.
இந்தியா பதிலடி
பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு இந்தியா துல்லியமான பதிலடியைக் கொடுத்தது. பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை என ஒன்று நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இருக்கும் என்பதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடினால் பாகிஸ்தான் பெரிய விலை கொடுக்க வேண்டும்" என எச்சரித்தார்.
இதற்கு முன்பு சிந்து நதி நீர் ஒப்பந்தம் அமலில் இருந்த வரை இந்தியா அங்கு எதாவது அணைகள் அல்லது மின்நிலைய திட்டங்களைக் கட்ட முயன்றால் அதற்குப் பாகிஸ்தான் தொடர்ந்து முட்டுக்கட்டை போடும். இந்தியா செனாப் ஆற்றில் தனக்கு இருக்கும் உரிமைகளைக் கூட பயன்படுத்த விடாமல் எல்லா திட்டங்களையும் பாகிஸ்தான் தாமதப்படுத்தும். ஆனால், இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்தியா தனது பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.
பணிகளைத் தீவிரப்படுத்தும் இந்தியா
அதன்படி செனாப் நதியின் மீது கட்டப்படும் ரன்பீர் கால்வாயின் திறனை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள 40 கன மீட்டர் திறன் என்பது இந்தியா வினாடிக்கு 150 கன மீட்டர் என்று இரட்டிப்பாகும். இது காஷ்மீரின் நீர்ப் பாசனத் திட்டத்திற்கு மிக பெரிய உதவியாக இருக்கும். அதேபோல அங்குள்ளன புனல் மின்நிலையத்தின் திறனையும் தற்போதுள்ள 3,360 மெகாவாட்டிலிருந்து 12,000 மெகாவாட்டாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் துணை நதிகளில் புதிய அணைகள் கட்டுவது உள்ளிட்ட பணிகளிலும் இந்தியா கவனம் செலுத்தத் தொடங்குகிறது. இந்த திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும். இது தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்குக் கடிவாளம் போடுவதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications