ஆப்கனிடம் கெஞ்சும் பாகிஸ்தான் பிரதமர்.. எல்லையில் குவியும் தாலிபான் படை.. விரைவில் தொடங்கும் போர்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடந்து வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் டிடிபி எனும் தாலிபான் அமைப்பினர் பாகிஸ்தான் எல்லையில் 15,000 படை வீரர்களை குவித்துள்ளதால் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்கானிஸ்தானுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் தொடர்ந்து நட்பு ரீதியான உறவை வைத்திருந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்த போதெல்லாம் அந்த நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது.
அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டில் ஆட்சியை கவிழ்த்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். தாலிபான்களின் இந்த செயலை பல உலக நாடுகளும் ஏற்கவில்லை. இதனால் தாலிபான்கள் அரசுக்கு முறையான அங்கீகாரம் என்பது வழங்கப்படாத நிலை உள்ளது.

ஆனால் பாகிஸ்தானோ, முதல் முதலாக ஆப்கானிஸ்தானை அங்கீகரித்தது. இது பாகிஸ்தான் மற்றும் தாலிபான்கள் இடையே நல்லுறவுக்கு சான்றாக அமைந்தது. ஆனால் தற்போது நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் என்பது ஏற்பட்டுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானில் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் தாலிபான்கள் என்ற பெயர் உள்ளது.
இந்த தாலிபான்களும், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தாலிபான்களும் ஒன்று இல்லை. இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்த டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்களின் நோக்கம் என்பது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தது போல் பாகிஸ்தானிலும் மக்களால் தேர்வு செய்த ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவது தான்.
இதனால் தான் அடிக்கடி இந்த பாகிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தானை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் பலியாகி வருகின்றனர். இதற்கு பதிலடியாக டிசம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அங்குள்ள பாகிஸ்தான் தாலிபான்களின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பக்டிகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மொத்தம் 15 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலை ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்கள் கடுமையாக கண்டித்தனர். தங்களின் வான்எல்லைக்குள் அனுமதியின்றி பறந்து தாக்குதல் நடத்தியதால் அவர்கள் கோபமடைந்தனர். அதோடு ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்தனர். இது ஒருபுறம் இருக்க ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான மிர்அலி எனும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாலிபான்கள் 15,000 படை வீரர்களை குவித்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானில் இயங்கும் டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்கள் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஏஆர்ஒய் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
‛‛ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரீக் ஐ தாலிபான்களின் இத்தகைய நடவடிக்கையை தொடரக்கூடாது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசிடம் பேச்சுவார்த்தை உள்ளோம். நமக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதனால் அப்பாவி மக்களை கொல்லும் நடவடிக்கை டிடிபி அமைப்பு கைவிட வேண்டும். டிடிபி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் அனைத்து நாடுகளுடன் நட்பை தான் விரும்புகிறோம். அதேபோல் பொருளாதார முன்னேற்றத்துக்கான உறவையும் விரும்புகிறோம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தாலிபான்களிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கெஞ்ச தொடங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications