இந்து, சீக்கிய பெயர்களை தெருக்களுக்கு சூட்டும் பாகிஸ்தான்.. பின்னணியில் இப்படி ஒரு பிளானா?
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரிவினை நடந்தேறி கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்த நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரின் தெருக்கள் மீண்டும் தங்களின் பழைய இந்து, சீக்கியம், ஜெயின் மற்றும் காலனித்துவ கால பெயர்கள் சூட்டும் பணி தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டு இருக்க கூடிய இந்த மாற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், பல ஆண்டுகளாக இஸ்லாமிய அடையாளத்துடன் இருந்த தெரு மற்றும் பகுதி பெயர்கள் தற்போது பழைய பெயர்களுக்கு மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. உதாரணத்திற்கு இஸ்லாம்புரா பகுதி மீண்டும் "கிருஷன் நகர்" எனவும், "பாப்ரி மச்ஜித் சௌக்" பகுதி "ஜெயின் மந்திர் சௌக்" எனவும், "ரெஹ்மான் கல்லி" பகுதி மீண்டும் "ராம் கல்லி" எனவும் மாற்றப்பட்டுள்ளது.

லாகூரின் பாரம்பரிய அடையாளம்
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குறைந்தது 9 இடங்களின் பெயர்கள் இப்படியாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் பல பகுதிகளிலும் பழைய பெயர்கள் மீண்டும் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த பெயர் மாற்ற நடவடிக்கை, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசின் "லாகூர் பாரம்பரிய பகுதி மறுசீரமைப்பு" திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கனவு திட்டமாக கருதப்படும் இந்த திட்டத்தின் மதிப்பு 50 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ஆகும். நகரத்தின் பழமையான கட்டிடக்கலை மற்றும் கலாசார அடையாளங்களை மீட்டெடுப்பதே இதன் நோக்கமாகும். பல ஆண்டுகளாக அலட்சியத்துடனும் கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல் மற்றும் சித்தாந்த அடிப்படையிலான மாற்றங்களால் லாகூரின் பாரம்பரிய அடையாளம் பாதிக்கப்பட்டதால் அந்த நகரின் பழைய பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியாக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.
பாரம்பரியத்தை அழிக்காமல் பாதுகாக்க
2025-ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளும், தற்போது பஞ்சாப் மாகாண முதல்வருமான மரியம் நவாஸ் ஆகியோரால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைப் போல, பாகிஸ்தானும் தன் நகரங்களின் வரலாற்று பாரம்பரியத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்தி, அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதும் ஆகும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பெயர் மாற்றத்திற்கான உண்மையான காரணம்
பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை, குறிப்பாக இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவர்கள் மீது ஒடுக்குமுறை, கட்டாய மதமாற்றம், சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் இடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகவே இந்த பெயர் மாற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், பல தசாப்தங்களாக இஸ்லாமியமயமாக்கப்பட்ட ஒரு நாட்டில், இந்த பெயர் மாற்ற முயற்சிக்கு பெரிதாக எதிர்ப்பு கிளம்பாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய பெயர்களை மீண்டும் கொண்டு வருவதன் மூலம், பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திடம், குறிப்பாக மேற்கத்திய நாடுகளிடம், தங்களின் "தீவிரவாத சாயல்" மாறி பரவலான போக்கு அதிகரித்து இருப்பதை காட்ட முயலும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தடைகள் விதிப்பதை தவிர்க்க
சகிப்புத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை மற்றும் பல கலாசாரங்களை மதிக்கும் நாடாக தன்னை மாற்றிக்கொண்டு இருப்பதாக காட்டுவதன் மூலம், தூதரக மற்றும் பொருளாதார உதவிகளை எளிதாகப் பெற முடியும் என கருதும் பாகிஸ்தான், அதற்கான முயறிசியாகவே இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதியுதவி போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக பாகிஸ்தான் நீண்ட காலமாக சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவேதான், லாகூர் போன்ற முக்கிய கலாசார நகரங்களில் காலனித்துவ கால பெயர்களை மீண்டும் கொண்டு வருவதன் மூலம், தீவிரவாதத்தை பின்தள்ளி, புதிய முயற்சியுடன் முன்னேறி வருவதாக ஒரு புதிய பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாக பாகிஸ்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அதேபோல, FATF உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மீண்டும் கடுமையான தடைகள் விதிப்பதை தவிர்க்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.














Click it and Unblock the Notifications