மனித மனங்களை செம்மைப்படுத்தி செழுமைப்படுத்தியவர் அம்பேத்கர்... லண்டன் விழாவில் புகழாரம்
லண்டன்: லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் டாக்டர் அம்பேத்கரின் 128வது ஜெயந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது அவருக்கு புகழாரம் சூட்டிப் பேசினார் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட அமைதி சேவகரும், இங்கிலாந்து என்ஆர்ஐ முதலீட்டாளருமான அப்துல் சையத் பாசித்.
தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் பாசித்தின் குடும்பத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஏராளம் வேர்ல்ட் ஹியுமனிட்டேரியன் டிரைவ் என்ற அமைப்பின் இயக்குநராகவும், நிறுவனத் தலைவராகவும் பாசித் இருக்கிறார்.

அம்பேத்கர் பிறந்த நாள் தின நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு அவர் பேசினார். அவரது பேச்சிலிருந்து...
அம்பேத்கர் மனித குலத்தின் மாபெரும் ஆசான் ஆவார். சட்டம் என்ற மருந்தின் மூலம் மனித மனங்களையும், உடம்பையும், ஆத்மாவையும் சுத்தம் செய்தவர் அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் சிற்பி. சட்டம் மற்றும் நீதியை உருவாக்கியவர். சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை விதைத்த விவசாயி. சமூக வளர்ச்சியை அளவிட்டு செழுமைப்படுத்திய பொருளாதார நிபுணர். அதிகாரத்திற்காக போராடாமல், தன் வளத்திற்காக போராடாமல், மனித குலத்துக்காக போராடியவர் என்றார் பாசித்.

தனது பேச்சின்போது இந்திய ரூபாய் நோட்டுக்களில் அம்பேத்கரின் படமும் இடம் பெறச் செய்யும் வகையில் தான் முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக பாசித் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications