தொப்பை இருந்தா பொண்ணு.. மற்றவர்களுக்கு 'நோ என்ட்ரி'! எத்தியோப்பியா பழங்குடியினரின் விநோத திருவிழா
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் உள்ள பழங்குடியின மக்கள் விநோதமான திருவிழா ஒன்றை நடத்துகின்றனர். அந்த திருவிழாவில் நடைபெறும் போட்டியில் யார் அதிகம் பருமனாக, பெரிய தொப்பையை வைத்திருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.
எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள 'ஓமோ' பள்ளத்தாக்கில் வசிக்கும் 'போடி' பழங்குடியின மக்கள்தான் இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.
எத்தியோப்பியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்தாலும் இந்த ஓமோ பள்ளத்தாக்கிற்கு அவர்கள் வரவிரும்புவதில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். காரணம் இந்த திருவிழாதான்.

தொப்பை ஹீரோக்கள்
ஒவ்வொரு புத்தாண்டுக்கும் இந்த திருவிழாவை போடோ பழங்குடியின மக்கள் நடத்துகிறார்கள். இது 'கேல்' திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இந்த பழங்குடியின மக்கள் குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரேயொரு லட்சியம்தான் இருக்கும். தனது தொப்பையை அதிகரித்து உடல் பருமனடைந்து இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதுதான் அது. இவர்களின் கலாச்சார வழக்கப்படி கேல் திருவிழாவில் நடத்தப்படும் இந்த பருமன் போட்டியில் யார் பெரிய தொப்பையை வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் இம்மக்களின் 'ஹீரோ'. இவர்களை திருமணம் செய்துகொள்ள பெரும் போட்டாபோட்டியே நிலவும்.

உணவு
ஆனால் இது ஒன்றும் அவ்வளவு சுலபத்தில் நடந்துவிடாது. ஏனெனில், பழங்குடியினர் உணவை வேட்டையாடி பெரும் வாழ்க்கை முறையினை கொண்டிருப்பவராவார்கள். இதனால் இவர்கள் உடல்களில் கொழுப்புகள் அதிகம் சேராது. எனவே இந்த திருவிழாவுக்கு 6 மாதத்திற்கு முன்னரே தங்கள் உடல் எடையை அதிகரிக்கும் பயிற்சியில் போட்டியாளர்கள் இறங்கிவிடுவார்கள். இதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு பசுவின் பால் கலந்த ரத்தம்தான். இவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு பசுவின் ரத்தம் உணவாக வழங்கப்படும். அதில் கொஞ்சம் பாலும் கலக்கப்பட்டிருக்கும். ஆறு மாதத்திற்கு இவர்களுக்கு வேறு உணவே கிடையாது. இது சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்ப்பதில்லை.

எல்லோராலும் முடியாது
அதேபோல, இவர்கள் இந்த காலகட்டங்களில் தனி குடில்களில் தங்கவைக்கப்படுவார்கள். இதனால் பெண்களுடன் உடலுறவு கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. காலையில் சூரியன் விடிந்தவுடன் அவர்களுக்கு பால் கலந்த பசு ரத்தம் வழங்கப்படும். தினமும் ஒவ்வொரு பசுவிலிருந்தும் சிறு துளையிடப்பட்டு ரத்தம் எடுக்கப்படும். பின்னர் அந்த துளை களிமண் கொண்டு அடைக்கப்படும். இந்த ரத்தத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடித்துவிட வேண்டும். இல்லையெனில் ரத்தம் உறைந்துவிடும். ஆனால் இது எல்லா பழங்குடியினருக்கும் செட் ஆகாது. பலர் இதனை குடிக்க முடியாமல் வாந்தி எடுத்துவிடுவார்கள்.

வெற்றி
எனவே உடல் எடை அதிகரிக்காது. இதனால் போட்டியின் பாதியிலிருந்தே சிலர் வெளியேறிவிடுவார்கள். போட்டிக்கு தயாராகும் இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு பணிவிடை செய்ய பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் போட்டியாளர்களுக்கு மது கொடுத்து, அவர்களின் வியர்வையை துடைத்துவிட்டு, தூங்காமல் இருக்க பாடல்களையும் பாடுவார்கள். ஆக இதையெல்லாம் அனுபவித்து, தடைகளையெல்லாம் கடந்து வருபவர்கள்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

அனுபவம்
சமீபத்தில் இங்கு சென்றிருந்த வெளிநாட்டு பயணி ஒருவர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதாவது, "இவர்களுக்கு இந்த 6 மாத காலத்திற்கு பசு ரத்தத்தையும், பசும்பாலையும் தவிர வேறு எதுவும் தெரியாது. போட்டி நடைபெறும் நாளில் அந்த இடத்திற்கு எங்கள் கார்களில் போட்டியாளர் ஒருவரை அழைத்து சென்றோம். அவரால் நடக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எடை போட்டியிருந்தார். இவர் காரில் வரும் போது கூட பால் கலந்த ரத்தத்தை குடித்துக்கொண்டே வந்தார். போட்டியில் பங்கேற்கும் கடைசி நிமிடம் வரை தன்னுடைய எடையை அதிகரிக்க வேண்டும் என்பதே இவரின் நோக்கம்" என்று கூறியுள்ளார்.

கலையிழக்கும் திருவிழா
போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுவிட்டால் அவர் தன் வாழ்நாள் முழுக்க அக்கூட்டத்தின் ஹீரோவாக கருதப்படுவார். இவரை திருமணம் செய்துகொள்ள அக்குழுவின் பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படி போட்டி நடைபெறும். போட்டி முடிந்த பின்னர் சில நாட்களில் அந்த ஹீரோவின் எடை குறைந்துவிடும். எப்படியாயினும் அவர் ஹீரோதான். இவ்வளவு மகிழ்ச்சிகளுடனும், கொண்டாட்டங்களுடனும் நடைபெறும் இந்த திருவிழா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கலையிழந்துகொண்டே வருகிறது. ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்கள் இம்மக்களின் வாழ்விடங்களை கைப்பற்ற முயன்று வருகின்றன. அரசாங்கம் இவர்களை முகாம்களில் தங்க வைக்கும் ஏற்பாட்டிற்குள் இறங்கி இருக்கிறது. இதனால் விரைவில் எங்கள் 'கேல்' திருவிழா இன்னும் சில நாட்களில் அழிந்துவிடும் என அம்மக்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications