போரில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது! உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து மோடி கவலை!
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் நிலையில், உக்ரைன் போரில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து புதினிடம் கவலை தெரிவித்திருக்கிறார்.
இந்திய - ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்பங்கேற்றார். அதன் பிறகு 2022, 2023ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி ஜூலை 8,9 தேதிகளில் ரஷ்யாவில் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மோடி நேற்று மாஸ்கோ சென்றடைந்தார். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில். இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரில் உயிரிழக்கும் குழந்தைகள் குறித்து மோடி கவலை தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை.
இந்த சந்திப்பில், ரஷ்யா ராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், "அமைதியை நிலைநாட்ட அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது. அமைதி குறித்த இந்தியாவின் எதிர்பார்ப்புகளை புடினுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்று உங்களுக்கும் உலக சமூகத்திற்கும் உறுதியளிக்கிறேன். வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையாது" என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், "ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்பதை நான் உங்களுக்கும் உலக சமூகத்துக்கும் உறுதியளிக்கிறேன். புதிய தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற, அமைதிப் பேச்சுகள் தேவை. மாறாக வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்" என்று பிரதமர் கூறியுள்ளார்.
முன்னதாக உக்ரைனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், குழந்தைகள் மரணம் குறித்து மோடி பேசியது பெரும் கவனம் பெற்றிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது குறித்து,
"உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். அதில் மூவர் சிறுவர்கள். 170 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் அமைந்துள்ள மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இளம் புற்றுநோயாளிகள் தான் அவர்களது இலக்கு. பலர் அதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒரு உலகில் கொடுங்கோன்மை செயல்களை செய்யும் குற்றவாளியை மாஸ்கோவில் கட்டி அணைப்பதை பார்க்கும் போது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது" என x தளத்தில் பதவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications