நகரும் கோட்டை.. பிரதமர் மோடி சென்ற ரஷ்ய அதிபர் புதினின் ‘அவுரஸ் செனட்’.. ராக்கெட்டும் தொட முடியாது?
மாஸ்கோ: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஒரே காரில் பயணித்தார். பிரதமர் மோடி பயணித்தது 'அவுரஸ் செனட்' எனப்படும் உயர் பாதுகாப்பு கொண்ட சொகுசு காராகும். இந்த நிலையில் அந்த காரின் சிறப்பம்சங்கள் என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முடிந்த நிலையில், இந்தியா - ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜி ஜின்பிங், விளாடிமிர் புதின் ஆகியோரை சந்தித்து பேசினார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஒரே காரில் பயணித்தனர். அப்போது அவர்கள் சென்ற கார், உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களைக் கொண்ட 'அவுரஸ் செனட்' (Aurus Senat) ஆகும்.

மோடி புதின்
இந்த அவுரஸ் செனட் காரை உலகமே "Fortress on Wheels" என அழைக்கிறது. அதாவது, சக்கரங்களில் நகரும் கோட்டை என அழைக்கப்படுகிறது. வெளிப்படையாக பார்ப்பதற்கு சொகுசு கார் போல் தெரிந்தாலும், உள்ளே பாதுகாப்பு கருவிகள் அடுக்கடுக்காக பொருத்தப்பட்டுள்ளன. இது சாதாரண வி.ஐ.பி. கார் அல்ல, அதிபரின் உயிர் பாதுகாப்புக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கவச வாகனம் என்றே சொல்லலாம்.
அவுரஸ் செனட்
இந்த காரை அவுரஸ் மோட்டார்ஸ் (Aurus Motors) நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ரஷ்யாவின் NAMI, Sollers JSC மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் Tawazun Holding ஆகியவை பங்குதாரர்களாக உள்ளன. 2021-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், அதன் பின்னர் தொடர்ந்து விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ பயண வாகனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு கார்
அவுரஸ் செனட் கார், வெளிப்புறத்தில் இருந்து ஏவப்படும் தாக்குதல்களைத் தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புல்லட் புரூஃப் கண்ணாடி எந்தவொரு குண்டு தாக்குதலையும் தடுக்க வல்லது. மேலும், ராக்கெட் எதிர்ப்பு கவசம், மிக சக்திவாய்ந்த ஆயுதத் தாக்குதலையும் சமாளிக்கும் திறன் கொண்டுள்ளது. ஒரு வேலை வெளியில் இருந்து குண்டுகள், காஸ், துப்பாக்கி சூடு உள்ளிட்ட எந்தவொரு தாக்குதலையும் தடுக்க நவீன தொழில்நுட்பம் கொண்ட கவுண்டர் அட்டாக் பாதுகாப்பு ஆயுதங்களும் உள்ளன. மேலும், காருக்குள் அவசர கால சிகிச்சைக்கான அடிப்படை மருத்துவ அவசர வசதி உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
சக்கர கோட்டை
அந்த வகையில், இது சாதாரண விஐ.பி கார் அல்ல, உண்மையில் ரஷ்யா அதிபருக்கான நகரும் பாதுகாப்புக் கோட்டை என்கின்றார்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள். இந்த கார் உலகளவில் மிகக் குறைவான அளவில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 120 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒரு அவுரஸ் செனட் கார் விலை 1.8 கோடி ரூபிள் (ரஷ்ய கரன்சி) ஆகும். இந்திய மதிப்பில் இது சுமார் ₹2.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கவச வாகனம்
இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த காரை, ரஷ்ய அதிபர் புதினுக்கு அடுத்தபடியாக, 2024-ல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-க்கும் இந்த அதிநவீன காரை அவுரஸ் மோட்டார்ஸ் வழங்கியது. இதனால், இந்த காரின் சர்வதேச முக்கியத்துவம் மேலும் உயர்ந்தது. பிரதமர் மோடி, புதினுடன் இணைந்து இந்த அவுரஸ் செனட் காரில் பயணித்தது, இரு நாடுகளின் உறவை வெளிப்படுத்தும் வகையில் பெரும் செய்தியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications