Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோடியின் பெரிய ரிஸ்க்".. உக்ரைனுக்கு இன்று பிரதமர் ரயில் பயணம்! 20 மணி நேரம் திக் திக்

Subscribe to Oneindia Tamil

கீவ்: ரஷ்யா போருக்கு நடுவே பிரதமர் மோடி பெரிய ரிஸ்க் எடுத்து இன்று போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு செல்ல உள்ளார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு நடுவே பிரதமர் மோடி மொத்தம் 27 மணிநேரம் உக்ரைனில் இருப்பார். இதில் 20 மணிநேரம் என்பது ரயில் பயணத்திலேயே முடிவடையும். இந்நிலையில் தான் உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் பிரதமர் மோடிக்கான ரயில் பயணம் மற்றும் அந்த ரயிலில் உள்ள சிறப்புகள் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடான போலந்து மற்றும் உக்ரைன் புறப்பட்டு சென்றார். நேற்று அவர் போலந்தை அடைந்தார். இதன் மூலம் 1979 ல் அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய்க்கு பிறகு 45 ஆண்டுகள் கழித்து போலந்து நாட்டுக்கு சென்ற பிரதமர் என்ற பெருமையை மோடி நேற்று பெற்றார். பிரதமர் மோடியின் போலந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

narendra modi ukraine poland

அதன்பிறகு பிரதமர் மோடி இன்று போலந்து சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு உக்ரைன் செல்ல உள்ளார். உக்ரைனில் தற்போது போர் நடந்து வருகிறது. ரஷ்யா வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கிய இந்த போர் 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உலக நாடுகள் சமாதானம் செய்ய முயன்றும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அதுமட்டுமின்றி ரஷ்யாவில் இருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடாக கடந்த 1991ம் ஆண்டு உருவானது. அன்று முதல் இன்று வரை இந்திய பிரதமர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. இதன்மூலம் உக்ரைன் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளாக போர் நடந்து வரும் சூழலில் உக்ரைனுக்கு ரிஸ்க் எடுத்து பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

அதாவது பிரதமர் மோடி இன்று போலந்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். அப்போது அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி வலியுறுத்தினார். இத்தகைய சூழலில் தான் உக்ரைனுக்கு தற்போது பிரதமர் மோடி செல்ல உள்ளார்

பிரதமர் மோடிக்கும், விளாடிமிர் புதினுக்கும் நல்ல நட்பு உள்ளது. இதனால் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் ஒன்று ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி பிரதமர் மோடி பேசலாம் என்பது தான். அதேபோல் இன்னொரு காரணம் ஒன்றும் உள்ளது. பொதுவாக ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களும் வேறு நாட்டுக்கு விமானத்தில் செல்வார்கள். அப்படித்தான் நம் நாட்டில் இருந்து பிரதமர் மோடி போலந்துக்கு விமானத்தில் சென்றார். ஆனால் போலந்தில் இருந்து உக்ரைனுக்கு பிரதமர் மோடி விமானத்தில் செல்லாமல் ரயிலில் பயணிக்க உள்ளார்.

பிரதமர் மோடி பயணிக்கும் இந்த ரயில் போலந்து - உக்ரைன் எல்லையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு செல்லும். இதில் தான் இன்று இரவு பிரதமர் மோடி பயணத்தை தொடங்க உள்ளார். போலந்து - உக்ரைன் எல்லையில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி ரயில் ஏறி 10 மணிநேர பயணத்தை கடந்து கீவ் நகருக்கு நாளை காலை சென்றடைவார். அதன்பிறகு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். போருக்கு நடுவே கீவ் நகரில் பிரதமர் மோடி 7 மணி இருப்பார். அதன்பிறகு மீண்டும் பிரதமர் மோடி கீவ் நகரில் இருந்து இந்த ரயிலில் போலந்து வந்து நம் நாடு திரும்பவார்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி ஏன் போலந்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விமானத்துக்கு பதில் ரயிலில் செல்கிறார்? அந்த ரயிலில் உள்ள சிறப்புகள் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பிரதமர் மோடி இன்று போலந்தில் இருந்து உக்ரைனுக்கு ரயிலில் புறப்படுகிறார். உக்ரைனுக்கு இதுவரை நம் நாட்டு பிரதமர்கள் யாரும் செல்லாத நிலையில் மோடி இன்று செல்ல உள்ளார். இது பெருமையான விஷயம் என்றாலும் கூட இந்த பயணம் என்பது திகிலானது. ஏனென்றால் மோடியின் இந்த பயணம் நாம் நினைப்பது போல் அவ்வளது சுலபமானதாக இருக்கப்போவது இல்லை.

ஏனென்றால் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலை ரஷ்யா படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனால் உக்ரைனின் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கேட்க தொடங்கிய குண்டு சத்தம் இன்னும் ஓயவில்லை. பிரதமர் மோடி பயணிக்கும் இன்றைய தினமும் ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்த உள்ளன. ரஷ்யா நமக்கு நட்பு நாடாக இருந்தாலும் கூட பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தையொட்டி போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

இதனால் உண்மையிலேயே மோடியின் இந்த பயணம் அதிக ரிஸ்க்கானது தான். ஏனெ்னறால் எந்த நேரத்தில் ரஷ்யா குண்டு போடும் என்று தெரியாது. இருப்பினும் கூட பிரதமர் மோடி துணிச்சலுடன் அதேவேளையில் உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் முடிவை எடுத்துள்ளார். போர் சவாலை தாண்டி மோடி எப்படி உக்ரைன் செல்வார்? அவருக்கு பாதுகாப்பு குறைபாடு இருக்காதா?
இதை எப்படி உக்ரைன் சமாளிக்கும்? இப்படி மோடியின் பயணம் குறித்து பலருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால் எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தான். அது தான், ‛ரயில் ஃபோர்ஸ் ஒன்' (Rail Force One). இது என்னவென்றால் போலந்து - உக்ரைன் நாட்டு எல்லையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் வரை இயங்கும் ரயிலாகும். இந்த ரயிலில் தான் பிரதமர் மோடி இன்று போலந்து -உக்ரைன் எல்லையில் இருந்து கீவ் நகருக்கு பயணிக்க உள்ளார்.

போர் நடக்கும் உக்ரைனில் சாலை மார்க்கமான பயணம் ஆபத்தானது. அதேபோல் வான்வெளி பயணம் செய்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தான் உள்ளது. வானத்தில் விமானங்கள் பறந்தாலே சுட்டு வீழ்த்தும் ரஷ்யாவால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூட விமானத்தில் பறப்பது இல்லை. அவரும் கீவ் நகரில் இருந்து ரயிலில் போலந்து வந்து அங்கிருந்து தான் விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறக்கிறார்.

ரஷ்யாவின் தரைவழி, வான்வெளி தாக்குதல் தான் இந்த 2 பயணங்களுக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் தான் உக்ரைனுக்கு பிரதமர் மோடி ரயிலில் செல்ல உள்ளார். இந்த ரயில் போலந்து - உக்ரைன் எல்லையில் இருந்து கீவ் நகர் வரை டீசலில் இயங்கி வருகிறது. இந்த ரயில் கீவ் நகரை சென்றடைய 10 மணிநேரம் வரை ஆகும்.

இதற்கு முன்பு மின்சாரத்தில் இந்த ரயில் இயங்கியது. இதனால் பயண நேரம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மின் உற்பத்தி நிலையங்கள் ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் இன்ஜின் டீசலில்இயங்கி வருகிறது. இதனால் கீவ் நகருக்கு செல்ல 10 மணிநேரம் வரை நேரம் பிடிக்கிறது. பிரதமர் மோடி பயணிக்கும் இந்த ரயிலில் பல சிறப்பு வசதிகள் உள்ளன.

இந்த ரயிலின் விசாலமான அறை, சொகுசு சோபா, மேஜை, சேர், அகலமான டிவி, ஏசி, டைனிங் வசதி, ஓய்வெடுக்கும் வசதி, மீட்டிங் நடத்துவதற்கான வசதி, கழிப்பறை, இன்டர்நெட் வசதி என அனைத்தும் உள்ளது. ரயிலின் வெளிப்புறம் இரும்பால் ஆனது. ரயிலின் உட்புறம் மரத்தால் ஆன வேலைப்பாடுகள் அதிகம். ரயிலின் உட்புறம் என்பது 5 நட்சத்திர விடுதிகளின் மேற்கூரையை போல் ரசிக்கும்படியாக இருக்கும். பிரதமர் மோடி பயணம் செய்யும் போது பாதுகாப்பு வீரர்களும் உடன் இருப்பர்.

ரயிலின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தை தொடர்ந்து கண்காணிப்பும் வகையில் வீரர்கள் பணி செய்வார்கள். விஐபி பயணிகளை பாதுகாக்கவே தனி பாதுகாவலர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ரயிலில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத கண்ணாடி, எத்தகைய காலநிலையிலும் கம்யூனிகேசனை வழங்கும் வசதிகள் உள்ளன.

இப்படி சிறப்பான பாதுகாப்பு அம்சம் இருந்தாலும் போர் நடக்கும் நாட்டில் ரயில் பயணம் த்ரில்லிங் ஆனதாக தான் இருக்கும். இந்த த்ரில் நிறைய ரயில் பயணத்தை பிரதமர் மோடி 20 மணிநேரம் மேற்கொள்ள உள்ளார். இன்று இரவு கீவ் நகருக்கு 10 மணிநேர பயணம். அதன்பிறகு கீவ் நகரில் இருந்து மீண்டும் ரயிலில் போலந்து வர 10 மணிநேரம் என 20 மணிநேரம் இந்த பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளார்.

மேலும் இந்த ரயிலில் பிரதமர் மோடி தவிர இதற்கு முன்பும் பல உலக தலைவர்கள் பயனித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து எல்லையில் இருந்து உக்ரைனுக்கு ரகசியமாக இந்த ரயிலில் தான் வந்திறங்கினார். அதேபோல் அதேபோல் ரஷ்யா தாக்குதலுக்கு நடுவே பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இத்தாலி பிரதமராக இருந்த மரியோ டிராகி உள்ளிட்ட தலைவர்கள் இந்த ரயில் மூலம் தான் கீவ் நகருக்கு சென்று உக்ரைனுக்கு ஆதரவு வழங்கினர்.

இந்த சொகுசு ரயில் உக்ரைன் கொடி தேசியக்கொடியில் இடம்பெற்றிருக்கும் நீலம், மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் இந்த ரயில் என்பது முதலில் கீவ் நகரில் இருந்து உக்ரைனின் கிரிமீயா பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கிரிமீயாவை கடந்த 2014ல் ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து தான் ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு கீவ் நகரில் இருந்து உக்ரைன் - போலந்து நாட்டின் எல்லை வரை இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+