அமெரிக்காவில் அசத்தல் பொங்கல்!
வாஷிங்டன்(யு.எஸ்): 'திரைகடலோடி திரவியம் தேடு' என்ற முன்னோர்களின் கூற்றுக்கு உயிர் கொடுக்கும் விதமாக நம் தமிழர்கள் உலகெங்கும் உள்ள தேசங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
சென்ற இடத்தை சொந்த இடமாக்கிக் கொண்ட அவர்கள் நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது தான் சிறப்பான அம்சமாகும். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்களை கணக்கெடுத்தால் தமிழகத்தின் ஒரு மாவட்ட மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கலாம்.
ஆனால் அங்கே பூகோள ரீதியாக வெவ்வேறு மாநகர, சிறு நகரங்களில் வசித்து வருகிறார்கள். எந்த ஊரில் இருந்தாலும் மறக்காமல் கொண்டாடும் பண்டிகை தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் ஆகும். அமெரிக்கத் தமிழ் ஆன்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் எவ்வாறு பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள்.

1. தமிழ்ச் சங்கங்களின் சங்கம் பொங்கல்
அமெரிக்காவில் நூறு குடும்பங்களுக்கும் குறைவாக வசிக்கும் ஊர்களில் கூட தமிழர்களை ஒன்றிணைக்கும் சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்களின் கூட்டமைப்பாக வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (FeTNA) இருக்கிறது. ஒவ்வொரு தமிழ் சங்கமும் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக கொண்டாடுவது பொங்கல் விழாக்கள் தான். 'ஒவ்வொரு ஊரும் ஒரு விதத்தில் புதுமை' என வகை வகையாக கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பொங்கல் தினம் பெரும்பாலும் வேலை நாட்களாக இருப்பதால், முதல் வார இறுதியிலோ அல்லது அடுத்தடுத்த வார இறுதியிலோ இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

2. டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம்
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 1 ம் தேதி ஃப்ரிஸ்கோ ஹெரிட்டேஜ் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. ஓவியப்போட்டி, 'ஒரு வார்த்தை நூறு டாலர்'. தமிழ் சொற்கள் போட்டி, நடனப்போட்டி ஆகியவை குழந்தைகளுக்கான போட்டிகளாகும். சூப்பர் ஜோடி மற்றும் கோலப்போட்டிகள் பெரியவர்களுக்கான போட்டிகள். மேலும் சில சிறப்பு அம்சங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன. 'சங்கே முழங்கு' பாடலுக்கான சிறப்பு நடனத்திற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

3.மிசோரி தமிழ்ச் சங்கம்
மிசோரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டம் செயிண்ட் லூயிஸ் நகரில் ஜனவரி 26ம் தேதி, கிழக்கு ஃபோர்ட் சம்வால்ட் உயர் நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெறுகிறது. பறை இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பசுமை பாதுகாப்பு என்ற தலைப்பில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். சிறப்பு நிகழ்ச்சியாக நீயா நானா கோபி நாத் பங்கேற்கும் விவாத மேடை நடைபெறுகிறது. அறுசுவை உணவு படைக்க. சிகோகா நாகேந்திரன் நேரடியாக வந்திருந்து, தமிழக முறையில் சமையல் செய்து 1000 பேருக்கு சிறப்பு விருந்தும் உண்டு.

4.சிகாகோ தமிழ்ச் சங்கம்
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் விஜய் டி.வி 'நீயா நானா' கோபிநாத் வழங்கும் விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜனவரி 25ம் தேதி போலிங்ப்ரூக் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெறும் இந்த பொங்கல் விழாவில், பாரம்பரிய, கிராமிய, திரைப்பட நடனம், செயிண்ட் லூயிஸ் அமெரிக்க மக்கள் கலைக் குழுவினரின் பறையிசை நடனம், நாடகம் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன

5.வால்மார்ட் கோட்டையில் ’மண்வாசனை’ பொங்கல்
வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டின் தலைமையிடமான அர்கான்சா மாநிலம் பெண்டன்வில் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள்..வடமேற்கு அர்கான்சா தமிழர்கள் என்ற அமைப்பாக, 'மண்வாசனை' என்ற பெயரில் ஆண்டு தோறும் பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். ஜனவரி 18ம் தேதி பெண்டன்வில் உயர்நிலைப் பள்ளி அரங்கில் காலை பத்தரை மணி முதல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. பட்டிமன்றம், கவிதைப் போட்டிகளுடன் செயிண்ட் லூயிஸ் மக்கள் கலைக் குழுவினரின் பறையிசை நடனம், சிலம்பாட்டம் ஆகியவை சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெறுகிறது. வளையல் கடை, டீக்கடை, கூழு மண்டி, பஞ்சாயத்து மேடையுடன் கூடிய 'கிராமச் சந்தை' யையும் பொங்கல் விழாவுக்காக உருவாக்குகிறார்கள்

6.வாஷிங்டன் தமிழ்ச் சங்கம்
வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா, ஜனவரி 18ம் தேதி ஹயாத்ஸ்வில் நார்த்வெஸ்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெறுகிறது. நடனம், நாடகம், பேச்சுப்போட்டி, இசை அரங்கம் உள்ளிட்டவைகள் இடம்பெறுகின்றன. குழந்தைகளுக்காக ஒரு குறளுக்கு ஒரு டாலர் நிகழ்ச்சியும் உண்டு. குழந்தைகளுக்கு நல்ல பெயர் சூட்டுவது எப்படி என்ற கலகலப்பு கலந்துரையாடல் நடைபெற உள்ளது. முத்தாய்ப்பாக எம்.ஜிஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியாக எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சியும் உண்டு. மேலும், அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் பொதுவானது பொங்கல் என்பதை உணர்த்தும் விதமாக வாசிங்டன் வட்டாரத்திலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளையும் இணைத்து 'ஒரே இடம் - ஒரே இனம் - ஒரே பொங்கல்' என இதை கொண்டாடுகிறார்கள்

7.அட்லாண்டா தமிழ்ச் சங்கம்
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா, பிப்ரவரி 1ம் தேதி, லாரன்ஸ்வில் மவுண்டன்வியூ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெறுகிறது.. நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் உண்டு. சிறப்பு நிகழ்ச்சியாக நீயா நானா கோபி நாத்தின் விவாத மேடை நடைபெற இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமெரிக்காவில் வாழை இலையில் உணவு படைத்து அசத்தியவர்கள் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தினர்.

8. சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச் சங்கம்
சிறிய ஊர், குறைந்த எண்ணிக்கையில் தமிழர்கள் என்றாலும் தென் கரோலைனா, சார்ல்ஸ்டன் நகர பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் சிறப்பு பெற்றவையாகும். 1330 திருக்குறள்களையும் மந்திரம் போல் ஒலி வடிவத்தில் அமைத்தவர்கள் இந்த சங்கத்தினர். தமிழர்கள் வாழ்வு முறை, பாரம்பரியத்தை அமெரிக்கர்களுக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு பொங்கல் விழாவை, வருகை தரும் அமெரிக்கர்களுக்காக தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளார்கள். டேவிஸ் ஆடிட்டோரியத்தில் ஜனவரி 25ம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில், சிரிப்பு நாடகம், நடன நிகழ்ச்சிகளுடன் கடையேழு வள்ளல்கள் பற்றிய சிறப்பு நாடகமும் இடம்பெறுகிறது. கூடவே தமிழ் இசை, நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் உண்டு.

9. சான் ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ்ச் சங்கம்
சான் ப்ரான்ஸிஸ்கோ பகுதி வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா , ஜனவரி 25ம் தேதி, சான் ராமனில் உள்ள கேல் ராஞ்ச் நடுநிலைப் பள்ளி அரங்கில் நடைபெறுகிறது. திறந்த வெளியில் பொங்கலிட்டு, குலைவையிட்டு தமிழகப் பாரம்பரியத்துடன் பொங்கல் கொண்டாடுகிறார்கள். நாட்டுப்புற கலைகள் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகின்றன.

10. பாரதி தமிழ்ச் சங்கம்
கலிஃபோர்னியா வளைகுடா பகுதியின் இன்னொரு தமிழ்ச் சங்கமான பாரதி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா ஜனவரி 18ம் தேதி மில்பிட்டஸ் ஜெயின் கோவிலில் நடைபெறுகிறது.. பாரம்பரிய நடனம், நாடகம், இசை அரங்கம், பல்சுவை நிகழ்ச்சிகளுடன், பெரியவர்களுக்கான ‘உன்னோரு ஒரு நிமிடம்' என்ற விளையாட்டுப் போட்டியும் நிகழ்ச்சியில்இடம் பெறுகிறது.

11. அமெரிக்கத் தமிழ் நடிகர், சமூக சேவகர் திருமுடி
கலிஃபோர்னியா, சான் ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியில் வசிக்கும் அமெரிக்கத் தமிழ் நடிகரும், சமூக சேவகருமான திருமுடிக்கு பொங்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேனி பக்கத்து கம்பம் ஊர்க்காரரான இவருக்கு கரும்பு இல்லாமல் பொங்கல் எப்படி?. பாரம்பரிய உடையுடுத்தி, பொங்கலிட்டு, படையல் செய்து, வழிபட்ட பிறகு தான் அலுவலகம் செல்கிறார். மாலையில் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்து, வார இறுதியில் நண்பர்களுடன் தனிக் கொண்டாட்டம் நடத்துகிறார். திறந்த வெளியில், பொங்கலிட்டு, குலவையிட்டு அமெரிக்காவிலேயே தமிழக பொங்கல் சூழலை உருவாக்கி விடுகிறார்கள்.. இந்த ஆண்டு, வளைகுடா பகுதியில் திருக்குறள் போட்டியை அறிமுகப்படுத்தும் கூடுதல் முயற்சியிலும் ஏற்பட்டுள்ளார்கள்.

12. டல்லாஸ் தமிழ் சங்க தலைவர் கீதா அருணாச்சலம்
பஞ்சு அருணாச்சலத்தின் மகளும் டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்க தலைவருமான கீதா, அமெரிக்காவிலும் பாரம்பரிய பொங்கல் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார். காலையில், குடும்பத்தாருடன் பட்டாடை உடுத்தி, வெண்பொங்கல், சக்கரைப் பொங்கலிட்டு, நடு வீட்டுக்கோலமிட்டு அவைகளை படையல் செய்கிறார். உடன் பதினோரு வகை தமிழ் காய்கறிகளைக் கொண்டு தயாரித்த குழம்பு மற்றும் கூட்டு பொறியல்களையும் படைத்து வழிபடுகிறார்கள். மாலையில் குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் வசிப்பதால் வீட்டு முற்றத்தில் விறகடுப்பு வைத்து பொங்கல் வைக்க இயலவில்லை என்றாலும், மற்ற அனைத்து வகையிலும் தமிழக பாரம்பரியத்துடன் பொங்கல் கொண்டுகிறார்கள்

13. தமிழ்விழா 2014 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொற்செழியன்
2014 ஆம் ஆண்டின் ஃபெட்னா தமிழ் விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், அமெரிக்காவில் பண்டைய தமிழ் அடையாளாங்களை மீட்டெடுப்பதில் தனிகவனம் செலுத்தி வருபவருமான பொற்செழியன் வீட்டு பொங்கல் சிறப்பு வாய்ந்தது. பொங்கலிட்டு, குலவையிட்டு, சூரியனுக்கு நேராக படையலிட்டு, இயற்கை வழிபாடு செய்வது இவர்களது வழக்கம். உடன் திருக்குறள் மந்திரம், திருக்குறள் மறை மனவளக் கலை ஆகியவற்றுடன் வழிபாடு செய்கிறார்கள். திருவள்ளுவர் தினத்தன்று வெவ்வேறு திருவள்ளுவர் சிலைகள், திருக்குறள் புத்தகங்களை கொலு வைப்பது போல் மேடையில் அமைத்து நண்பர்களை அழைத்து விருந்தளிக்கிறார்கள். கலந்துரையாடுகிறார்கள். ஆண்டுக்கு ஒரு நண்பர் வீடு என்ற கணக்கில் திருக்குறள், இயற்கை வழிபாடும் நடைபெறுகிறது. செயிண்ட் லூயிஸ் சிலம்பாட்டக்குழு மற்றும் பறை நடனக்குழுவில் முக்கிய பங்காற்றுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

14. தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா ஒருங்கிணைப்பாளர் சோமு
சிகாகோ தமிழ் சங்க தலைவரும், தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா ஒருங்கிணைப்பாளருமான சோமு, பொங்கலுக்கான கருப்பு கரும்பு மஞ்சள்குலை, வெல்லம் எல்லாம் வாங்கி வைத்து விட்டார். சோமுவுக்கு அமெரிக்க நண்பர்களும் அதிகம் உண்டு. பொங்கல் விழா குறித்து அவர்களுக்கெல்லாம் எடுத்துரைத்ததன் விளைவு அனைத்து அமெரிக்க நண்பர்களும் மறக்காமல் சோமுவுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பி விடுகிறார்கள் வார இறுதியில், அவருடைய நண்பரும், தமிழ் நாடு அறக்கட்டளை தலைவருமான அறவாழியுடன் இணைந்து சுமார் நூறு நண்பர்கள் குழுவாக பொங்கல் கொண்டாடுகிறார்கள் கரும்பு, வாழை, கோலம், மேடை அலங்காரம் என ஊரில் நடப்பது போல் பேச்சுப்போட்டி, விளையாட்டு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கலக்குகிறார்கள்.

15. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை வேலு ராமன்
டல்லாஸ் - ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனரும், வாழ்வியல் பயிற்சியாளருமான வேலு ராமன் - விசாலாட்சி தம்பதியினர், குடும்ப வழக்கப்படியே பொங்கல் கொண்டாடுகிறார்கள். காலையில் பொங்கல், படைத்து விட்டு, மாலையில் விளக்கு ஏற்றி உறவுக்காரர்களை விருந்திற்கு அழைக்கும் வழக்கம் இவர்களுக்கு உண்டு. உறவுக்காரர்கள் அனைவரையும் அன்றைய தினம் தொலைபேசியிலாவது அழைத்து 'உங்கள் விட்டில் பால் பொங்கியதா ? எங்கள் விட்டில் பால் பொங்கியது" என்று கேட்டு மகிழ்கிறார்கள். இவர்களுக்கு பொங்கல் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, பொங்கலையொட்டி வரும் திருவள்ளுவர் தினத்தை நினைவு கூறும் விதமாக திருக்குறள் போட்டியை சாஸ்தா தமிழ் அறக்கட்டளை மூலம் நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு கூடுதலாக ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி உள்ளடக்கிய அவ்வை அமுதம் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளடக்கிய தமிழ்திறன் போட்டிகளும் கூடுதலாக இடம்பெறுகின்றன. ஜனவரி 18 முதல் பிப்ரவரி 22 வரை வார இறுதிகளில் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.

16. வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் தண்டபாணி
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் (ஃபெட்னா) தலைவர் முனைவர் தண்டபாணிக்கு பொங்கல் என்றாலே பேரவையின் ஆண்டு விழாக்கான ஆயத்த வேலைகள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. சுமார் நாற்பது தமிழ் சங்கங்களை கொண்ட பேரவையில் பொதுவாக அனைத்து சங்கங்களும் பொங்கல் விழாவை தவறாமல் கொண்டாடுகின்றன. இவ்விழாக்களின் போது பேரவையின் தலைவர் தண்டபாணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நேரடியாக கலந்து கொண்டு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி பேரவை விழா ஏற்பாடுகள் பற்றி அறிவித்து வருகின்றனர். 2014-ம் ஆண்டிற்கான பேரவை விழா மிசோரி தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஜூலை 4-5 தேதிகளில் நடைபெறவுள்ளது.
மிசோரி தமிழ்ச் சங்க கூட்டத்தில் மிகச் சமீபத்தில் கலந்து கொண்டதால், அடுத்த வருட பேரவை விழாவிற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய சான் ப்ரான்சிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றத்தின் பொங்கல் விழாவில் ஜனவரி 25ம் தேதி கலந்து கொள்கிறார். அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் சேவை ஒரு புறம் இருந்தாலும், பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் தனது சொந்த கிராமமான, திருப்பத்தூர் அருகே மகநூர்ப்பட்டிக்கு சென்று பொங்கல் கொண்டாடுவது அவருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

17. மேரிலாண்ட் துணைச் செயலர் ராஜன் நடராஜன்
அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் இருக்கும் தமிழரான, மேரிலாண்ட் துணைச்செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன், பொங்கல் தினத்தன்று காலையில் பாரம்பரிய வழக்கப்படி குடும்பத்தினரோடு பட்டாடை உடுத்தி பொங்கலிட்டு, சாமி கும்பிட்டு விட்டு அலுவலகம் செல்கிறார். கருப்பு கரும்பு , மஞ்சள், தேங்காய் எல்லாம் வாங்கி விட்டார். அலுவலகத்தில் பணிபுரியும் சக அமெரிக்க நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி, பொங்கல் கொண்ட்டாத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார். மாலையில்,வெவ்வேறு சமுதாயத்தை சார்ந்த நண்பர்களை வீட்டுக்கு அழைத்து இனிப்பு பொங்கலுடன், சிறப்பு விருந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஏனைய மக்களுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்க பொங்கல்விழா மிகச் சரியானதாகும் என்பது டாக்டர் ராஜனின் கருத்தாகும்












Click it and Unblock the Notifications