வங்கதேசத்தில் மீண்டும் ராணுவ ஆட்சி? பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா-நாட்டை விட்டு தப்பியதால் பதற்றம்!
டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் புரட்சி வன்முறையாக வெடித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா. அத்துடன் வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா தப்பி ஓடிவிட்டார். ஷேக் ஹசீனாவின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனையடுத்து வங்கதேச நாட்டில் மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழ்நிலைகள் உருவாகி இருக்கிறது.
வங்கதேச நாட்டில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தார். வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடினர்.

ஆனால் ஷேக் ஹசீனா அரசானது மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி அடக்குமுறைகளை ஏவிவிட்டது. கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வரும் மாணவர்களின் புரட்சியில் 300க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் வங்கதேசத்தில் பெரும் பதற்றமும் எங்கெங்கும் வன்முறையும் வெடித்து கொண்டே இருந்தது. இதனையடுத்து வங்கதேச ராணுவம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்ய அறிவுறுத்தி கெடு விதித்தது.
இதனால் ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் வங்கதேசத்தை நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டார். ஷேஹ் ஹசீனா தற்காலிகமாக இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கக் கூடும் என்றே ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் நுழைந்து சூறையாடி தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் வங்கதேசத்தில் மீண்டும் ராணுவ ஆட்சி அமையக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் ராணுவம் புரட்சியில் ஈடுபடுவது ஒன்றும் புதியதும் அல்ல. வங்கதேச விடுதலைக்குப் பின்னர் 1975-ம் ஆண்டு வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்பட்டு முஜிபுர் ரஹ்மான் வங்கதேச ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் ராணுவத்தின் இந்த புரட்சி அடக்கப்பட்டது. ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள்தான் தற்போது நாட்டை விட்டே தப்பி ஓடிய ஷேக் ஹசீனா. 1975 ராணுவப் புரட்சியின் போது ஷேக் ஹசீனாவும் ஷேக் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். அந்தப் புரட்சியின் போது மொத்தமாக ஷேக் ஹசீனாவின் குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.
அதே 1975-ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றொரு ராணுவப் புரட்சியை வங்கதேசம் எதிர்கொண்டது. இப்படி வங்கதேசத்தின் வரலாற்றில் 19 முறை ராணுவப் புரட்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2 முறை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1981-ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மானும் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். 1996-ம் ஆண்டு பிரதமராக இருந்த கலீதா ஜியாவுக்கு எதிராக ராணுவத் தளபதி அபு சலே முகம்மது நசீம் புரட்சியில் ஈடுபட முயன்றார். ஆனால் அபு சலே முகம்மது கைது செய்யப்பட்டார்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 2009-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பகுதியில் புரட்சியில் ஈடுபட முயற்சித்தனர். ஷேக் ஹசீனாவையும் படுகொலை செய்ய முயன்றனர். கடந்த 2012-ம் ஆண்டும் ஹசீனாவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்த முயன்றது.
தற்போது மாணவர்கள் போராட்டத்தின் மூலமாக ஷேக் ஹசீனா நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. இதனால் வங்கதேசம் மீண்டும் ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கும் நிலைமை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications