புடின் அதிகாரத்தில் இருக்க கூடாது! வார்த்தையை விட்ட பிடன்.. பதறியடித்து விளக்கம் தந்த வெள்ளை மாளிகை!
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் அதிகாரத்தில் இருக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்தது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் தற்போது போலந்து சென்று இருக்கிறார். பிடன் தற்போது போலந்தில் இருக்கும் நிலையில், அதன் எல்லை பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
போலந்து அதிபர் டுடாவுடன் சந்திப்பு நடத்திய பிடன், அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில்தான் கூட்டம் ஒன்றில் பிடன் பேசியது பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன சொன்னார்?
அமெரிக்க அதிபர் பிடன் போலந்து கூட்டம் ஒன்றில் பேசிய போது, நேட்டோவில் சிறிய கல்லை கூட நகர்த்த வேண்டும் என்று ரஷ்யா நினைக்க கூடாது. நேட்டோ படையின் ஒரு பிடி மண்ணை கூட ரஷ்யாவால் பிடிக்க முடியாது. இந்த போரில் ஏற்கனவே ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது. திட்டமிடல் ரீதியாக இந்த போர் ரஷ்யாவிற்கு தோல்வியை மட்டுமே கொடுத்துள்ளது.

ரஷ்ய மக்கள்
ரஷ்ய மக்கள் எண்களின் எதிரிகள் கிடையாது. ஆனால் கடவுளே புடின் இனியும் அதிகாரத்தில் இருக்க கூடாது. நாங்கள் உக்ரைன் மக்களுடன் இருக்கிறோம். உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். நேட்டோவை காக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை
இந்த நிலையில் பிடனின் இந்த கருத்துக்கு சர்ச்சைக்கு உள்ளானது. வேறு நாட்டின் அதிபர் ஆட்சியில் இருக்க கூடாது என்று இன்னொரு நாட்டு அதிபர் சொல்ல முடியாது. அதிலும் ரஷ்ய அதிபர் பதவியில் நீடிக்க கூடாது என்று பிடன் சொல்வது கிட்டத்தட்ட ரஷ்யாவிற்கு எதிராக போருக்கு செல்வதற்கு சமம். அல்லது புடின் ஆட்சியை ரஷ்ய மக்கள், எதிர்க்கட்சிகள் கலைக்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பதற்கு சமம்.

விளக்கம்
பிடனின் இந்த கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம், அதிகாரா மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிடன் பேசவில்லை. புடின் பற்றி பிடன் பேசியது அவரின் எழுதப்பட்ட உரையில் இல்லை. புடின் மற்ற நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த கூடாது என்று பொருள்படும் வகையில் மட்டுமே அப்படி பேசினார். ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை, என்று வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

ரஷ்யா கொதிப்பு
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரஷ்யாவில் என்ன ஆட்சி நடக்க வேண்டும் என்பதை ரஷ்ய மக்கள் முடிவு செய்வார்கள்.யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ரஷ்ய மக்கள்தான் முடிவு செய்வார்கள். நீங்கள் இதில் கருத்து தெரிவிக்க முடியாது. உக்ரைனில் எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை போர் தொடரும், என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications