இந்திய எல்லைக்கு அருகே.. வங்கதேசத்தில் திடீரென குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்.. என்ன நடக்கிறது?
டாக்கா: வங்கதேசத்தில் கடந்தாண்டு ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது முதலே அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் அங்கு அதிகரித்து வருகிறதாம். குறிப்பாக இந்தியா, மியான்மர் எல்லை அருகே அமைந்துள்ள சிட்டகாங்கில் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் என்ன.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஓராண்டில் பல்வேறு மாற்றங்கள் நடந்துவிட்டது. அங்கு மிக வலிமையான ஒரு அரசை அமைத்திருந்த ஹசீனா, ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். மற்றொரு பக்கம் வங்கதேசத்தில் அமெரிக்க ராணுவம் சத்தமில்லாமல் ராணுவத்தை அதிகளவில் குவித்து வருகிறதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

வங்கதேசத்தில் அமெரிக்க ராணுவம்
குறிப்பாக வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.. இது இந்தியாவுக்கும் மியான்மர் எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ள எல்லைப் பகுதியாகும். இங்கு அமெரிக்க ராணுவ செயல்பாடுகள் அதிகரித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
எப்போதும் ஜப்பானில் உள்ள யோகோடா விமானப்படைத் தளத்தில் இருந்து செயல்படும் அமெரிக்காவின் C-130J சூப்பர் ஹெர்குலிஸ் ரக நவீன விமானம், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்டகாங்கில் உள்ள ஷா அமானத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விமானமும் அங்கு வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பின்னணி
சிட்டகாங்கில் இந்த விமானம் தரையிறங்கியது தற்செயலானது அல்ல என இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மியான்மர் கிளர்ச்சியாளர்களை அமெரிக்காவும் சீனாவும் தங்களது பக்கம் இழுக்க முயன்று வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் தான் மியான்மர் எல்லையில் இந்த விமானம் தரையிறங்கியுள்ளது. எனவே, இதைத் தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியாது என்கிறார்கள்.
அதிகரிக்கும் அமெரிக்க ராணுவம்
ஹசீனா ஆட்சியில் இருந்த வரை வெளிநாட்டு ராணுவ நடவடிக்கை எதுவும் வங்கதேசத்தில் பெரியளவில் இருந்தது இல்லை. ஆனால், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி அமைந்ததும், அங்கு நிலைமை மாறியது. சிட்டகாங் பகுதியில் ஆய்வுகள், கூட்டுப் பயிற்சிகளை அமெரிக்கா அதிகம் செய்ய ஆரம்பித்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு தான், அமெரிக்கா மற்றும் வங்கதேச ராணுவம் இணைந்து "ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல்-25" மற்றும் "டைகர் லைட்னிங்-2025" ஆகிய இரண்டு ராணுவப் பயிற்சிகளை சிட்டகாங்கில் நடத்தின.
இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அமெரிக்காவின் இன்னொரு சிறப்புப் படை சிட்டகாங் பகுதிக்கு வந்திறங்கியிருக்கிறது. இன்னொரு அமெரிக்க- வங்கதேச கூட்டுப் பயிற்சி திட்டமிடப்பட்டு வருவதாகவும் அதற்காகவே அமெரிக்கப் படைகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேச ராணுவம்
இதுபோல கூட்டுப் பயிற்சிக்கு அமெரிக்கப் படைகள் வருவதில் சிக்கல் இல்லை. ஆனால், கூட்டுப் பயிற்சியை முடிந்த பிறகும் சில அமெரிக்கப் படைகள் வெளியேறவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுபோல அமெரிக்கப் படைகள் காரணமே இல்லாமல் இருப்பதில் வங்கதேச ராணுவத்திற்கே உடன்பாடு இல்லையாம். இருப்பினும், முகமது யூனுஸ் அரசு இதில் வாய் திறக்காமல் இருப்பதால் அந்நாட்டு ராணுவத்தால் எதுவும் சொல்ல முடியவில்லை.
ஷாக் தகவல்
கடந்தாண்டு வங்கதேசத்தில் வெடித்த புரட்சியில் ஹசீனா அரசு கவிழ்ந்தது. இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெடித்த போராட்டம் அப்படியே ஹசீனா அரசுக்கு எதிராகத் திரும்பியது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வரும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும், தனது அரசைக் கவிழ்த்தது அமெரிக்காவின் சதி என்றும் செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுத்ததாலேயே அமெரிக்கா தனது அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாகவும் ஹசீனா குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications