ஜுலை 3 முதல் 14ம் தேதி வரை துபாயில் ரமலான் ஃபோரம் சொற்பொழிவு
துபாய்: துபாயில் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஃபவுன்டேஷன் தலைவர் மேன்மைமிகு ஷேக் அஹமத் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்களது வழிகாட்டுதலில் துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தக மார்க்கெட்டிங் துறையின் சார்பில் 13வது ரமலான் ஃபோரம் ஜுலை 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை (ரமலான் 6 முதல் 17 வரை) துபாய் உலக வர்த்தக மையத்தின் ஜாபில் ஹாலில் நடைபெற இருக்கிறது.
கடந்த 12 ஆண்டுகளாக சிறப்புடன் நடைபெற்று வரும் ரமலான் ஃபோரம் நிகழ்ச்சிகள் இவ்வாண்டு 12 நாட்கள் நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் வருகை புரிந்தது ஏற்பாட்டாளர்களிடையே ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரமலான் ஃபோரம் சொற்பொழிவில் உலகின் மிகச் சிறந்த அறிவாளிகள் சொற்பொழிவாற்ற உள்ளனர். இவ்வாண்டு அரபி மொழி சொற்பொழிவின் போது அரபி மொழி தெரியாதவர்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு உரையும் உடனுக்குடன் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில மொழியில் இந்தியாவின் டாக்டர் ஜாஹிர் நாயக், மலையாள மொழியில் ஷேக் ஹுசைன் ஸலபியும் உரை நிகழ்த்த உள்ளனர்.
மேலும் உருது, வங்காளம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மொழிகளிலும் சொற்பொழிவுகள் இடம் பெற உள்ளன.
சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தராவீஹ் இரவுத் தொழுகைக்குப் பின்னர் துவங்கும். தராவீஹ் தொழுகை தொழுவதற்கு துபாய் உலக வர்த்தக் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியக் கண்காட்சி, குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெறும்.
தினமும் நிகழ்ச்சிகளுக்கு வருவோருக்கு இலவச உம்ரா பயணம், சாம்சங் போன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட பல பரிசுகள் பெறவும் வாய்ப்புள்ளது.
மேலதிக விபரங்களுக்கு:
ஃபேஸ்புக் : http://www.facebook.com/almultaqa.ae
டிவிட்டர் : http://twitter.com/multaqaramadani
இன்ஸ்டாகிராம் : http://instagram.com/almultaqaalramadani
வாட்ஸ் அப் : 050 2136555












Click it and Unblock the Notifications