‛‛ரஷ்யாவுக்காக உக்ரைனில் போரிடும் இந்தியர்கள்’’.. மோடி கூறிய வார்த்தை.. ‛ஓகே’ சொன்ன புதின்! செம
மாஸ்கோ: ரஷ்யாவுக்காக இந்தியர்கள் உக்ரைனில் போரிட்டு வருகின்றனர். இதில் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் இந்தியர்களை மீட்க மத்திய அரசு முயன்று வரும் சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். அப்போது மோடி வைத்த கோரிக்கையை ஏற்று உக்ரைனில் போரிடும் இந்தியர்களை இந்தியாவுக்கு சொந்த செலவில் பத்திரமாக அனுப்பி வைப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இந்தியா- ரஷ்யா இடையே நெருங்கிய உறவு உள்ளது. காலம் காலமாக இந்தியாவும், ரஷ்யாவும் நண்பர்களாக செயல்பட்டு வருகின்றன. பல்வேறு இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது. அதனை நம் நாடு ஒருபோதும் மறந்தது இல்லை.

இதனால் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா எந்த பொருளாதார தடையும் விதிக்காமல் உள்ளது. அதோடு நட்பு நாடு என்ற முறையில் போரை கைவிட்டு பிரச்சனைக்கு பேசி தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் இந்தியா- ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாடு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடி, ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார்.
அதன்பிறகு பிரதமர் மோடி, அங்கிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள இல்லத்துக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை பார்த்த விளாடிமிர் புதின் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார். மேலும் அவரிடம் கைக்குலுக்கி, கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு நேற்று இரவு விளாடிமிர் புதின் விருந்து அளித்தார். அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை என்பது திட்டமிடப்படாத பேச்சுவார்த்தையாகும்.
இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் முக்கிய கோரிக்கையை வைத்தார். அதாவது இந்தியாவை சேர்ந்தவர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்டு வருகின்றனர். இதில் ஏற்கனவே 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மற்றவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். தங்களின் மகன்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டு தர வேண்டும் என்று அவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ரஷ்ய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இந்நிலையில் தான் நேற்றைய சந்திப்பின்போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் இதுபற்றி பேசினார். அப்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிடும் இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட விளாடிமிர் புதின், ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் உக்ரைனில் இருந்து வெளியேற்றவும், அவர்கள் இந்தியா திரும்பவும் வசதி செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர். இதன்மூலம் ரஷ்யாவுக்காக போரிடும் இந்தியர்கள் 30க்கும் அதிகமானவர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளனர்.
முன்னதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த இளைஞர்கள் ரஷ்ய ராணுவ உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் தாங்கள் உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதாவது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் போர் நடவடிக்கையை தொடங்கியது. இந்த போர் இன்னும் தொடர்ந்து வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் பிற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா போர் பணிக்கு அனுப்பியது. இதற்காக ஏஜென்ட்டுகள் மூலம் பல்வேறு நாடுகளில் ஆட்கள் சேர்க்கப்பட்டு ரஷ்யா அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் உக்ரைன் போர் களத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் இந்திய இளைஞர்களும் அடங்கும்.
இந்த விவகாரம் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பூதாகரமானது. இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை விசாரணை நடத்தி இந்தியர்களை ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் போர் களத்துக்கு அனுப்பிய ஏஜென்ட்டுகளின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்தன. இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடியின் நேரடி கோரிக்கையை ஏற்று உக்ரைனில் போரிடும் இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்ப ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஓகே சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications