"மொத்தம் 4 கண்டிசன்..அதுக்கு ஓகேனா அடுத்த நொடி போர் நின்றுவிடும்.." ரஷ்யா திட்டவட்டம்! அடுத்து என்ன
மாஸ்கோ: உக்ரைன் போர் 2ஆவது வாரமாகத் தொடரும் சூழலில் போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் நாட்டிற்கு 4 கண்டிஷன்களை ரஷ்யா விதித்துள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா போர் இன்றுடன் 13ஆவது நாளாகத் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் மிகக் கடுமையாகப் போராடி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தால் முன்னேற முடியவில்லை என்றும் உக்ரைன் நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் போர்
இந்தப் போர் காரணமாக உலக நாடுகளும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாகச் சீனா தவிர கிட்டதட்ட உலகின் அனைத்து நாட்டுப் பொருளாதாரங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதில் இருந்து உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வந்த சூழலில் இந்தப் போர் சர்வதேச பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அமைதி பேச்சுவார்த்தை
இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த வாரம் முதல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், நேற்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றன. இருப்பினும், இதில் எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வரும் மார்ச் 10ஆம் தேதி துருக்கியில் சந்தித்துப் பேச அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையிலாவது உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றே பொதுமக்கள் விரும்புகின்றனர்.

நிபந்தனைகள்
போர் தொடர்ந்து வருவதால் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள அப்பாவி மக்களால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 2ஆவது வாரமாக இந்தப் போர் தொடரும் நிலையில், இதை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா சார்பில் சில முக்கிய நிபந்தனைகள் உக்ரைன் நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த 4 நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக் கொண்டால் உடனடியாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படும் என்று ரஷ்யச் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கை
அந்த 4 நிபந்தனைகள் குறித்து ரஷ்ய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "முதலில் உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். உக்ரைன் நாட்டில் அதிகரிக்கும் ராணுவ மயமாக்கலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தப் போரை ஆரம்பித்துள்ளோம். உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும், அதை அவர்கள் நிறுத்திக் கொண்டால் போதும், எங்கள் ராணுவம் யார் மீதும் தாக்குதல் நடத்தாது. அடுத்து, கிரிமியா பிராந்தியத்தை ரஷ்யாவின் ஒரு அங்கம் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

தனி குடியரசுகள்
மூன்றாவதாக உக்ரைன் அதன் அரசியலமைப்பை நடுநிலையாக இருக்கும் வகையில் மாற்ற வேண்டும். உக்ரைன் எந்தவொரு சர்வதேச அமைப்புகளில் நுழைவதற்கான நோக்கத்தை நிராகரிக்கும் வகையில் தேவையான அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். கடைசியாக (ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள) டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிராந்தியங்களைத் தனி குடியரசுகளாக அறிவிக்க வேண்டும். இந்த 4 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் போர் உடனடியாக முடிவுக்கு வரும்" என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைன் பதில் என்ன
இருப்பினும், இந்த நிபந்தனைகளுக்கு உக்ரைன் சார்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் இல்லை. தனக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே உக்ரைன் நடுநிலை நாடாக இருக்க வேண்டும் என்பதே புதினின் விருப்பம். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே உக்ரைன் மெல்ல ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சார்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் கடந்த 2014இல் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது...












Click it and Unblock the Notifications