உக்ரைன் மீது போரை தொடங்கிய புதின்.. ரஷ்யாவை எதிர்க்கும் நாடுகள் எவை? ஆதரிக்கும் நாடுகள் எவை?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. அதேநேரம் சில நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு ஏற்ப, ரஷ்யா இன்று உக்ரைன் மீது போரை ஆரம்பித்துள்ளது.

இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 அதிபர் புதின்

அதிபர் புதின்

இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புதின் வெளியிட்டிருந்த வீடியோ உரையில் கூட, அண்டை நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை தான் இது எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது யாராவது தலையிட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யாவை வெளிப்படையாக எதிர்த்துள்ளன.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

அதேநேரம் ரஷ்யாவின் கூட்டணி நாடுகள் எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துள்ளன. கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வரும் உலக பொருளாதாரத்தை இந்தத் தாக்குதல் மீண்டும் சீர்குலைக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழலில் ஒவ்வொரு நாடும் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதைப் பார்க்கலாம். நேட்டோவின் மிகவும் சக்திவாய்ந்த உறுப்பினர் என்ற அடிப்படையில், உக்ரைன் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதில் அமெரிக்கா கையில் உள்ளது.

 அமெரிக்கா

அமெரிக்கா

உக்ரைன் நேட்டோ உறுப்பினராகக் கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா திட்டவட்டமாக அமெரிக்கா நிராகரித்து இருந்தது. ரஷ்யா தனது போரை ஆரம்பிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ரஷ்யா நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய அதிபர் பைடன், அத்தனைக்கும் ரஷ்யா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 பிரிட்டன்

பிரிட்டன்

அதேபோல பிரிட்டனும் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்த்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், போரினால் அதிக மனித இழப்புகளைச் சந்திக்க நேரிடும் எனப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்திருந்தார். உக்ரைன் நாட்டுக்குப் போர் விமானங்கள், போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பப் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா பிரதமர் புதின் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், சில கடுமையான பொருளாதாரத் தடைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

ஜெர்மனி

ஜெர்மனி

இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதன்மையான நாடான ஜெர்மனி மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறை கையாண்டுள்ளது. ஏனெனில் ஜெர்மனியின் தற்போதைய அதிபர் ஓலாஃப் ஷால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி பாரம்பரியமாக ரஷ்யாவுடன் நல்லுறவை வளர்த்து வருகின்றனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் ஜெர்மனி சமீபத்தில் தான் ரஷ்யாவுடன் வர்த்தகம் மற்றும் ஆற்றல் உறவுகளை விரிவுபடுத்தியது. இப்போது ரஷ்யா போரைத் தொடங்கி உள்ள நிலையில், இந்த பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ள ஜெர்மனி, இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் ஆலோசனை செய்து வருகிறது.

 ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் மீதான போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்த இருண்ட காலத்தில் உக்ரைனில் மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார், மேலும், நடைபெறும் பேரழிவுக்கு ரஷ்யா பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா

சீனா

எதிர்பார்த்தபடியே ரஷ்யாவின் நடவடிக்கையைச் சீனா எதிர்க்கவில்லை. மேலும், ரஷ்யா மீது சட்டவிரோதமாகப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என எதிர்த்துள்ள சீனா, உக்ரைனில் பதற்றம் அதிகரிக்க அமெரிக்காவே காரணம் எனக் குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. சொல்லப்போனால் இந்த விவகாரத்தில் சீனா நடுநிலையான நிலைப்பாட்டையே எடுக்க முயன்றுள்ளது. அது ரஷ்யாவின் போர் நடவடிக்கையை ஆதரிக்கவில்லை. அதேநேரம் வழக்கம் போல இதற்குக் காரணம் அமெரிக்கா தான் என்றும் சாடியுள்ளது.

 இந்தியா

இந்தியா

இந்தியாவும் இந்த விவகாரத்தில் நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க உடனடி நடவடிக்கை தேவை என அழைப்பு விடுத்துள்ள இந்தியா, இது பெரும் நெருக்கடியான சூழலை உருவாக்கும் என எச்சரித்துள்ளது மேலும், நிலைமையை முறையாகக் கையாளவில்லை என்றால் அமைதி மற்றும் வளர்ச்சி முற்றிலும் சீர்குலையும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பாக. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட 20 ஆயிரம் இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவதிலேயே இந்தியத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

 முன்னாள் சோவியத் நாடுகள்

முன்னாள் சோவியத் நாடுகள்

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை 2004இல் நேட்டோ உறுப்பினர்களாகின்றன. இந்த அனைத்து நாடுகளும் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

 இதர நாடுகள்

இதர நாடுகள்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இதில் தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. பெல்ஜியம் ரஷ்யாவின் தாக்குதலை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் வரலாற்றில் இருண்ட காலம் என குறிப்பிட்டுள்ளது. அதேபோல செக் குடியரசு, ரஷ்ய தாக்குதலைக் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று எச்சரித்ததுடன், நட்பு நாடுகளுடன் இணைந்து பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா உடன் நெருக்கமான உறவை வைத்திருந்த ஹங்கேரி கூட இதில் வெளிப்படையாக ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

 ஆதரிக்கும் நாடுகள்

ஆதரிக்கும் நாடுகள்

அதேநேரம் சில நாடுகள் ரஷ்யாவை வெளிப்படையாகவே ஆதரித்துள்ளன. சிரியாவில் கடந்த 2011இல் உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல் ரஷ்யா அதிபர் புதின், சிரிய அரசுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார். எனவே, எதிர்பார்த்தபடி ரஷ்யா நடவடிக்கைக்கு சிரியா ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல வெனிசுலாவும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களும் ரஷ்யாவை ஆதரித்துள்ளன. உக்ரைன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்யா மட்டுமே மக்கள் குடியரசாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+