அடுத்த லெவலுக்கு பாய்ந்த ரஷ்யா.. செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஆர்வம் காட்டும் உலக நாடுகள்
மாஸ்கோ: உலகின் பல நாடுகளும் மனிதர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவே திணறி வரும் சூழ்நிலையில், நாய், பூனை எனச் செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ரஷ்யா தொடங்கியுள்ளது.
கொரோனா வைரசின் கோரப்பிடி இன்னும் உலகைவிட்டு அகலவில்லை. பல்வேறு நாடுகளும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது இதனால் தடுப்பூசி பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது.

விலங்குகள் மத்தியில் கொரோனா
அதேபோல கடந்த சில மாதங்களாகவே மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்படுகிறது. விலங்குகள் எந்தளவு கொரோனாவால் பாதிக்கப்படும், கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதா என்பது குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால், அவை கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது மட்டும் உறுதி.

செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
இதனால் செல்லப் பிராணிகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க ரஷ்யா கார்னிவக்-கோவ் (Carnivak-Cov) என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு 6 மாதங்கள் வரை தடுப்பாற்றலை அளிப்பது ஆய்வுகளில் தெரியவந்தது. இந்தத் தடுப்பூசி நாய்கள், பூனைகள், நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு மத்தியில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்குத் தடுப்பூசி
இந்நிலையில், ரஷ்யா தற்போது செல்லப் பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள கால்நடை க்ளினிக்குகளில் இந்த பணிகள் நடைபெறுகிறது. வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பலரும், அவற்றுக்குத் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுவதாக ரஷ்ய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக நாடுகள் ஆர்வம்
முதல்கட்டமாக விலங்குகளுக்குச் செலுத்தப்படும் கார்னிவக்-கோவ் தடுப்பூசி தற்போது 17 ஆயிரம் டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாதம்தோறும் 30 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் இதை 50 லட்சமாக உயர்த்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அர்ஜெண்டினா, தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளும் இந்த கார்னிவக்-கோவ் தடுப்பூசியில் ஆர்வம் காட்டியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications