ரஷ்யாவில் ராணுவ ஜெனரல் கொலை! 4 மாதங்களில் 2வது முறை! ஒரே மாதிரி தொடரும் பேட்டர்ன்! பின்னணியில் யார்?
மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் ஒரு பக்கம் முடியாமல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யா நாட்டிற்குள்ளேயே திடீர் திடீரெனத் தாக்குதல்கள் நடந்து வருகிறது. அப்படிதான் இப்போது அங்கு இன்று கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களில் 2வது முறையாக ரஷ்யாவின் டாப் அதிகாரி கொல்லப்படுகிறார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது. இந்தப் போரை முடித்து வைக்க அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், அதற்குப் பெரிய பலன் இல்லை. அதேநேரம் ரஷ்யா எதிர்பார்க்காத நேரத்தில் அவ்வப்போது உக்ரைன் தாக்கி வருகிறது.

ரஷ்ய ஜெனரல் கொலை
இதற்கிடையே இன்று கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ரஷ்யாவின் குற்றவியல் புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மூத்த ரஷ்ய அதிகாரி கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ரஷ்ய ராணுவத்தில் முக்கிய செயல்பாட்டுத் துறையின் துணைத் தலைவராக இருந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக். மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியான பாலாஷிகாவில் வைத்து இவர் கொல்லப்பட்டுள்ளார். அங்கு இவரது காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது தெரியாமல் காரை இவர் இயக்கியபோது ஜெனரல் யாரோஸ்லாவ் கொல்லப்பட்டுள்ளார். இதை ரஷ்யக் குற்றவியல் புலனாய்வுத் துறை உறுதி செய்துள்ளது.
இந்தச் சம்பவம் ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோஸ்காலிக் வீட்டிற்கு அருகே அவரது கார் கொழுந்துவிட்டு எரியும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கார் வெடிகுண்டு
இது தொடர்பாகப் புலனாய்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறுகையில், "காரில் வைத்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். அவர் கண்டிப்பாக உயிரிழக்க வேண்டும் என்பதால் வெடிகுண்டைக் கூர்மையான துகள்களைப் போட்டு நிரப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட வெடிகுண்டு பாகங்களை மீட்டு ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.
யார் காரணம்
இந்தச் சம்பவத்திற்கு யார் காரணமாக இருக்கலாம் என்பது குறித்து எந்தவொரு தகவலையும் ரஷ்ய அரசு பகிரவில்லை. அதேநேரம் இந்தச் சம்பவத்தை ஒரு பயங்கரவாத செயல் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா சாடியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ஐரோப்பாவில் நடந்து வரும் போரை எப்படி நிறுத்துவது என்பதுதான் முக்கிய கேள்வி. ஒவ்வொரு நாளும் இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். உயிரை இழக்கிறார்கள். இன்று கூட, மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு ரஷ்ய அதிகாரி கொல்லப்பட்டார்" என்றார்.
முதல்முறை இல்லை
முன்பே குறிப்பிட்டது போல ரஷ்யாவில் முக்கிய ராணுவ அதிகாரி தாக்குதலில் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த டிசம்பர் 17ம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரும் இதேபோல வெடிகுண்டு வைத்தே கொல்லப்பட்டார். அதாவது அவரது வீட்டிற்கு வெளியே ஒரு மின்சார ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டு இருந்தது.
சரியாக இகோர் வெளியே வரும்போது, அதில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இகோர் கொல்லப்பட்டார். இகோர் ரஷ்யாவின் கதிர்வீச்சு, உயிரியல் மற்றும் வேதியியல் பாதுகாப்புப் படைகளுக்குத் தலைமை தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் நடந்து சில நாட்கள் கழித்து இத்தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications