அழாதீங்க லேடீஸ்... இதோ வந்தாச்சு ‘டியர்லெஸ்’ வெங்காயம்
வாஷிங்டன்: இல்லத்தரசிகளே, இனிமேல் நீங்கள் சமையல் செய்யும்போது கண்ணீர் விட்டுக் கதறி அழத் தேவையில்லை - காரணம், கண்ணில் தண்ணீர் வர வைக்காத நவீன வெங்காயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த வெங்காயத்தை உரிக்கும்போது ஒரு சொட்டுக் கண்ணீர் கூட கண்களிலிருந்து வராதாம்.

புரோட்டீன்....
வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணில் நீர் வருவதற்குக் காரணமே, வெங்காயத்தில் இருக்கும் அதீதமான புரோட்டீன்தான். ஆனால் புதிய வெங்காயத்தில் இந்த புரோட்டீன் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் கண்ணீர் வராதாம்.

எடையும் குறையும்...
இந்த டியர்லெஸ் வெங்காயத்தால், இதயநோய்களும் குணமாகுமாம், எடையும் வெகுவாக குறையுமாம்.

இதாங்க காரணம்...
இதுகுறித்து இந்த வெங்காயத்தை உருவாக்கியுள்ள ஆய்வாளர்கள் காலின் ஈடி மற்றும் அவரது சகாக்கள் கூறுகையில், வெங்காயத்திற்கு என்று தனித்துவம் கொண்ட வேதியியல் உள்ளது. இதனால்தான் வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் நீர் வருகிறது எரிச்சல் ஏற்படுகிறது.

புதிய வெங்காயம்....
எங்களது குழு, புதிய வகை வெங்காயம் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு வெற்றியாக கண்களில் நீரை வரவழைக்காத வெங்காயத்தை உருவாக்கியுள்ளோம்.

சல்பர் அதிகம்....
வழக்கமாக புரோட்டீன் வெங்காயத்தில் அதிகமாக இருக்கும். எங்களது புதிய வெங்காயத்தில் சல்பர் நிறைய இருக்கும்.

வெள்ளைப்பூண்டில் கூட....
வெள்ளைப் பூண்டில் கூட சல்பர் அதிகம் உள்ளது. இதனால்தான் பூண்டை உரிக்கும்போது கண்களில் நீர் வருவதில்லை.

இதயத்திற்கு நல்லது....
மேலும் பூண்டு இதயத்திற்கு நல்லது. அதேபோல எங்களது புதிய வெங்காயமும் இதயத்திற்கு இதமானதாக இருக்கும்.

பூண்டோட ‘குளோனிங்’ மாதிரி...
வழக்கமாக பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்வோர், இனிமேல் எங்களது புதிய வெங்காயத்தையும் அதிகம் சாப்பாட்டில் சேர்க்கலாம். ரத்தம் கட்டுவது, ரத்த உறைவு போன்றவற்றையும் இந்தப் புதிய வெங்காயம் தடுக்கும். அதாவது கிட்டத்தட்ட பூண்டு போலவே இந்தப் புதிய வெங்காயமும் செயல்படும்.

அழாத எலிகள்...
இந்த புதிய வெங்காயத்தை எலிகளிடம் வைத்து பரிசோதனை செய்தபோது எலிகள் அழவில்லை. மேலும் அவற்றின் எடையும் கணிசமாக குறைந்தது என்றனர்.

இது வேறயா...
தற்போது சாதாரண அழுகாச்சி வெங்காயமே பயங்கர விலையில் விற்கிறது. இதில் இந்தப் புதிய வெங்காயம், கண்களில் தண்ணீரை வரவைக்காவிட்டாலும் கூட விலை அழ வைக்குமா.?












Click it and Unblock the Notifications