கன்டெய்னருக்குள் பதுங்கி இருந்த 34 பேர், ஒரு ஆண் பிணம்.. இங்கிலாந்து துறைமுகத்தில் 'ஷாக்'!
லண்டன்: பெல்ஜியம் நாட்டிலிருந்து இங்கிலாந்தின் தில்பரி துறைமுகத்திற்கு வந்த கன்டெய்னரில் 34 பேர் பதுங்கி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து மீட்டுள்ளனர். அந்த கன்டெய்னரில் ஒரு ஆண் சடலமும் இருந்தது.
பெல்ஜியம் நாட்டின் ஸீபிரெக் என்ற துறைமுகத்திலிருந்து லண்டனுக்குக் கிழேக்க உள்ள தில்பரி துறைமுகத்திற்கு சரக்குக் கப்பல் வந்தது. அந்தக் கப்பலில் 64 கன்டெய்னர்கள் இருந்தன. தில்பெரி துறைமுகத்திற்குக் கப்பல் வந்ததும் ஒரு கன்டெய்னரிலிருந்து சத்தம் வந்துள்ளது. இதையடுத்து துறைமுக ஊழியர்கள் அந்த கன்டெய்னரை திறந்து பார்த்தனர்.

அப்போது அதில் 7 குழந்தைகள் உள்பட 34 ஆண்களும், பெண்களும் இருந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். காற்றுப் புகாத கன்டெய்னர் என்பதால் அனைவரும் உடலில் நீர்ச்சத்து குறைந்து மோசமான நிலையில் காணப்பட்டனர். மேலும், காய்ச்சலும் அவர்களை தாக்கியிருந்தது. ஒரு ஆண் உயிரிழந்திருந்தார்.
உடனடியாக மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. அனைவரும் இந்தியர்கள் என்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்கள் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக இப்படி வந்துள்ளதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் இவர்கள் கன்டெய்னருக்குள் பதுங்கி பயணித்து வந்துள்ளனர்.
கடந்த 2000மாவது ஆண்டு இப்படித்தான் இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்திற்கு கன்டெய்னரில் பதுங்கி வந்த 58 சீனர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டோவர் துறைமுகத்திற்கு வந்த கன்டெய்னரில் பதுங்கி வந்த 15 அகதிகளை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல லண்டனுக்கு வந்த லாரியில் ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டகத்தில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 16 ஆண்கள் பதுங்கி வந்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications