இலங்கை கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் கைது? உலக கோப்பையை வென்று தந்தவருக்கு நேர்ந்த கதி! ஷாக்
கொழும்பு: அண்டை நாடான இலங்கையின் கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் அர்ஜுனா ரணதுங்க கைது செய்யப்பட உள்ளார்.. 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் அர்ஜுனா ரணதுங்க. இவர் எதற்காகக் கைது செய்யப்பட இருக்கிறார். இதன் காரணம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. பணவீக்கம், பொருளாதாரச் சிக்கல் காரணமாகச் சில ஆண்டுகளாகவே இலங்கை போராடி வருகிறது. இதனால் அங்கு மாபெரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் கூட நடந்திருந்தது. இப்போது தான் இலங்கையில் நிலைமை மெல்ல சீராகி வருகிறது.

மாஜி கேப்டன் கைது
இதற்கிடையே இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கவை அந்நாட்டு போலீசார் அதிரடியாகக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர்.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் நுழைந்த அர்ஜுனா ரணதுங்க அந்நாட்டின் பெட்ரோலிய துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அமைச்சராக இருந்த காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரை கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்..
என்ன காரணம்
ரணதுங்கவும் அவரது சகோதரரும் நீண்டகால எண்ணெய் கொள்முதல் ஒப்பந்த நடைமுறைகளை மாற்றி, அரசுக்கு அதிகச் செலவாகும் வகையில் உடனடி கொள்முதல் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதாக ஊழல் கண்காணிப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 2017இல் மேற்கொள்ளப்பட்ட 27 கொள்முதல்கள் மூலம் அரசுக்கு 800 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் ₹23.5 கோடி) இழப்பு ஏற்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனா ரணதுங்க இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் இலங்கை திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என கொழும்பு மாஜிஸ்திரேட் அசங்கா போதரகமாவிடம் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ரணதுங்கவின் மூத்த சகோதரரும், அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோல் அமைப்பின் முன்னாள் தலைவருமான தம்மிக்க ரணதுங்க திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவருக்கு ஜாமீன் கொடுத்த நீதிபதிகள், அவர் வெளிநாடு செல்லத் தடை விதித்தனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை மார்ச் 13ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
யார் இவர்
62 வயதான இடதுகை வீரரான அர்ஜுனா, 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்தார். அந்த உலக கோப்பையில் அட்டகாசமாக விளையாடிய இலங்கை அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து கோப்பையை வென்றது. அது அப்போது இலங்கைக்கு மிகப் பெரிய சாதனையாகும். அங்கு கிரிக்கெட் வளரவும் இந்த வெற்று உதவியது.
சகோதரர்கள்
இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் போராட்டம் பெரியளவில் வெடித்தது அனைவருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த அனுர குமார அரசு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்தே ரணதுங்க சகோதரர்கள் மீதான இந்த வழக்கு தீவிரமடைந்தது.
அவரது மற்றொரு சகோதரரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான பிரசன்னா ரணதுங்கவும் கடந்த மாதம் காப்பீட்டு மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 2022 ஜூன் மாதம் தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் பிரசன்னா ரணதுங்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications