கந்தஹாரை கைப்பற்றிய தலிபான்கள்.. அடுத்த குறி தலைநகர் காபூலுக்குத்தான்?.. மக்கள் அச்சம்
காபூல்: ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய தலைநகரான கந்தஹாரை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக அந்த நாட்டின் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இதன் மூலம் மொத்தம் 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றதை அடுத்து தலிபான்களின் கை ஓங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2 ஆவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அது போல் தலைநகர் காபுல் அருகே உள்ள மூன்றாவது தலைநகர் ஹீரத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது போல் அடுத்தடுத்து முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருவதால் அங்குள்ள அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் தலைநகர் காபூலையும் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க படைகள் நாடு திரும்புவது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி சந்தித்தார். அவர் கூறுகையில் காபூலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அது போல் பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக அழைத்து வர 600 ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள், அதிகாரிகள் அனைவரும் வாபஸ் பெறப்படுவர் என தெரிகிறது.
கந்தஹாரை கைப்பற்றியதை தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் கந்தஹார் முழுவதும் கைப்பற்றியாகிவிட்டது. மார்ட்டின் ஸ்குயர் பகுதியில் தலிபான் படைகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பரிசளித்த ஹெலிகாப்டரையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 4 ஹெலிகாப்டரை சப்ளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications