தாய்லாந்துக்கு போகாதீங்க.. இந்தியர்களுக்கு மத்திய அரசு தந்த வார்னிங்.. பின்னணியில் இருக்கும் மோதல்
டெல்லி: தாய்லாந்து - கம்போடியா இடையேயான போர் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் தான் தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது மோதலும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முதல் இருநாடுகள் இடையேயான மோதல் வலுவடைந்து போராக மாறி உள்ளது.

நேற்று இருநாடுகளின் படை வீரர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இருந்து வருகின்றன. இருநாடுகளும் அண்டை நாடுகளாகும். இந்த நாடுகள் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மகாணமும் இருநாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
தாய்லாந்தின் சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா முயென் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக இருந்த மோதல் போராக மாறி உள்ளது. இருநாடுகளும் பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தினர். ராக்கெட் குண்டுகளை மாறி மாறி வீசி கொண்டனர். கம்போடியா மீது தாய்லாந்து எஃப் 16 ரக போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது. கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாய்லாந்து - கம்போடியா இடையே நடந்த இந்த மோதல் காரணமாக மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர். இதில் 2 பேர் ராணுவ வீரர்கள். மற்ற 14 பேரும் பொதுமக்கள் ஆவார்கள். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். மேலும் இருநாடுகளின் எல்லையில் இருந்து 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள கம்போடியா தூதரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட தாய்லாந்து அரசு, கம்போடியாவில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்து கொண்டுள்ளது. எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாடுகளும் அமைதி காக்க அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேபோல் மோதலை கைவிடும்படி இருநாடுகளுக்கும் ஐநா வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை செய்துள்ளது. தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், "தாய்லாந்து - கம்போடியா எல்லைக்கு அருகே நிலவும் சூழலை கருத்தில் கொண்டு தாய்லாந்தில் உள்ள உபோன் ரட்சதானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய 7 மாகாணங்களுகு்குச் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications