லிபியா வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஐநா
லிபியா: வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உயிரிழப்பு குறித்து ஐநா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லிபியா மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இந்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற வாடி டெர்ணா எனும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்தான் இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஆறு உருவாகும் மலை பகுதிக்கும், மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையில் டெர்ணா நகரம் இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியில் டேனியல் எனும் புயல் உருவானது. இது மெல்ல நகர்ந்து லிபியாவின் டெர்ணா நகரை குறி வைத்தது.

வானிலை ஆய்வு மையத்தினர் கனமழை குறித்து ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லிபியாவில் உறுதியான ஆட்சி இல்லாததால் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமலும், ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாமலும் இருக்கின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக வாடி டெர்ணா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இது இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்படுத்தி இறுதியில் உடைத்தெறிந்துள்ளது.
இப்படியாக இரண்டு அணைகளும் உடைந்ததன் காரணமாக டெர்ணா நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மனிதர்கள், வாகனங்கள், வீடுகள் என அனைத்தையும் வெள்ளம், நேரடியாக மத்திய தரைக்கடலுக்கு இழுத்து சென்றது. இதனையடுத்து அக்கம் பக்கம் நாடுகள் மீட்பு படைகளை லிபியாவுக்கு அனுப்பி வைத்தன. முதல்கட்ட மீட்பு பணியில் சில நூறு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நேரம் போக போக உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது.
தற்போது வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று ரெட் கிராஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பலரின் உடல்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. மத்திய தரைக்கடலில் உடல்கள் சென்றிருக்கலாம் என்று மீட்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், ஐநா இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வெள்ளத்தில் 3,958 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி கூறியுள்ளார். அதேபோல மற்றொருபுறம் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications