24 மணிநேரம் தான் டைம்..இந்திய தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்ட பாகிஸ்தான்.. பழிக்கு பழியால் ஷாக்
இஸ்லாமாபாத்: டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்யாமல் நம் நாட்டுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டதால் அவரை 24 மணிநேரத்தில் வெளியேற மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் அரசு, அந்த நாட்டில் செயல்பட்டு வரும் நம் நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் மீது பழிபோட்டு 24 மணிநேரத்தில் வெளியேற உத்தரவிட்டு இருப்பது இருநாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஏவுகணை வீசி நாம் அழித்தோம்.

பதிலுக்கு பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுத்த நம் நாடு பாகிஸ்தானின் 3 விமானப்படை தளத்தை அழித்தது. பதற்றம் உச்சமடைந்த நிலையில் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. அதன்பிறகு நம் நாடும் போரை நிறுத்துவதாக அறிவித்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று மத்திய அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வருகிறது. அந்த தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு நம் நாட்டுக்கு எதிரான சில வேலைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அதிகாரியை 24 மணிநேரத்தில் நம் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானும் ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நம் நாட்டின் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் அவருக்கான பணியை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி அவரை 24 மணிநேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய தினம் மத்திய அரசு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியேற கெடு விதித்த நிலையில் இரவில் பாகிஸ்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் மனநிலையில் பாகிஸ்தான் இத்தகைய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இன்னும் நிற்கவில்லை. தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் என்பது ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதைய இந்தியா, பாகிஸ்தான் உத்தரவில் தூதரக அதிகாரியின் பெயர், அவர்கள் எந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டனர் என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் 55 பேர் பணியாற்றினர். அவர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து 25 பேர் பாகிஸ்தான் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications