கனடாவில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கிறது ஜஸ்டின் ட்ரூடோ அரசு!
ஒட்டாவா: இந்தியாவிடம் கனடா தொடர்ந்து பஞ்சாயத்தை கூட்டி வரும் நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் கனடாவில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறது.
வடஅமெரிக்க நாடான கடனா, சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் கனடாவில், வெறும் 3.8 கோடி பேர்தான் வசிக்கின்றனர். எனவே, அந்நாடு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டினரின் குடியேற்றங்களையே பெரிதும் நம்பி இருக்கிறது. ஆனால், சமீப நாட்களாக இந்திய வம்சாவளியினர் என்கிற போர்வையில் பிரிவினைவாதிகளின் சில செயல்கள், இந்தியா-கனடா உறவை கடுமையாக பாதித்திருக்கிறது.

கனடாவில் ஆளும் ஜஸ்டின் ட்ரூடோ அரசில் ஆதிக்கம் செலுத்தும், சீக்கிய பிரிவினைவாதிகள், இந்தியாவுடன் கனடா அரசை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இந்தியாவில் குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்ட பிரிவினைவாதிகள், கனடாவில் இருந்துக்கொண்டு இந்தியாவில் நாசகார வேலைகளையும், பிரிவினை வேலைகளையும் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையில் இந்தியா இறங்கியபோது, இரு நாட்டு உறவுகளுக்கு இடையே பிரச்னை வெடித்திருக்கிறது.
சமீபத்தில் கூட, இந்தியாவின் தூதரக அதிகாரி மீது கனடா குற்றம்சாட்ட, இது குறித்து இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில், தற்போது கனடா அரசு முக்கிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது இனி வரும் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து கடனாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
அதன்படி, இந்த ஆண்டு 4,85,000ஆக இருக்கும் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 3,95,000ஆக குறைக்கவும், 2026ல் 3,80,000 ஆக குறைக்கவும், 2027ம் ஆண்டு 3,65,000 ஆக குறைக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து நேஷ்னல் போஸ்ட் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இது ட்ரூடோ அரசை காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். கனடா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில், உற்பத்தி நிலையானதாக இருக்கிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனில், ஆட்கள் எண்ணிக்கை அவசியம். ஆனால் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications