துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்.. இன்னொரு பக்கம் இத்தாலியிலும் அதிர்வு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
துருக்கியில் சேதங்கள் கடுமையாக உள்ளதால் சர்வதேச உதவியை அந்நாட்டு அரசு கோரி உள்ளது.
ரோம்: துருக்கி நிலநடுக்கத்தை அடுத்து இத்தாலி அரசு சார்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் சிறிய அளவில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
துருக்கியில் இன்று காலை 7.9 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருகில் உள்ள லெபனான், சைப்ரஸ், சிரியா ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் கட்டிடங்கள் பல இடிந்து உள்ளன.

துருக்கி
அங்கு இருந்த குடியிருப்புகள் பயங்கரமாக இடிந்து விழுந்துள்ளன. துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது. இதில் 60 பேர் அதிகாரப்பூர்வமாக பலியாகி உள்ளனர். உண்மையான பலி எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 60 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர்.

மீட்பு பணிகள்
தற்போது அங்கே மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில்தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு இருக்கிறது. துருக்கி மாலடையா என்ற பகுதியில் மட்டும் அதிகமாக 23 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் சிரியா எல்லையிலும் கடுமையாக நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கும் அதிக அளவில் கட்டிடங்கள் இடிந்து உள்ளன. துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

3 நிலநடுக்கம்
அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் அங்கே அதிகாலையில் ஏற்பட்டு உள்ளது. முதல் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட உடனே கடைசியாக 7.9 ரிக்டரில் அடுத்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. வெளியேறிய சிலரும் காருக்குள் போய் பாதுகாப்பிற்காக தஞ்சம் அடைந்து உள்ளனர். ஆனால் அவர்களின் கார்கள் மீதும் கட்டிடங்கள் விழுந்ததால் கார்களுக்கு உள்ளேயே அவர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு கட்டிடங்களில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. துருக்கியில் சேதங்கள் கடுமையாக உள்ளதால் சர்வதேச உதவியை அந்நாட்டு அரசு கோரி உள்ளது. உலக நாடுகள் மீட்பு பணிகளில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இத்தாலி
துருக்கி நிலநடுக்கம் காரணமாக அங்கே சுனாமி ஏற்படுமா என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தீவிர ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன . சுனாமி குறித்த பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் துருக்கி நிலநடுக்கத்தை அடுத்து இத்தாலி அரசு சார்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் சிறிய அளவில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கி உள்ளன. மீட்பு பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications