3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி பேச்சுவார்த்தை.. முடிவை நெருங்குகிறது உக்ரைன்-ரஷ்யா போர்!
இஸ்தான்புல்: உக்ரைன்-ரஷ்யா போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், இன்று இரு தரப்புக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றிருந்தார். ஆனால், ரஷ்ய அதிபர் நேரடியாக பங்கேற்கவில்லை.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் உரையாற்றினார். இதனையடுத்து பேச்சுவார்த்தை தொடங்கியது. போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதர ஐரோப்பிய நாடுகளும் போர் பற்றி கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். இதனையடுத்து டிரம்ப் இந்த விஷயத்தை கறாராக எடுத்துக்கொண்டார். தற்போது போர் நிறுத்தத்திற்கான நேரடி பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.
இதில் ஜெலன்ஸ்கி பங்கேற்றிருந்தாலும், புதின் பங்கேற்கமாட்டார் என்று முன்கூட்டியே சொல்லப்பட்டது. அதற்கு பதிலாக அவரது உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி, அவரது தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல் கலுசின், துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின்,ரஷ்ய பாதுகாப்பு படைகளின் இயக்குநர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் டிரம்பின் உக்ரைன் தூதர் கீத் கெல்லாக் ஆகியோரும் இருந்தனர்.
இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான். எனவே இதில் முழு முடிவு உடனடியாக மேற்கொள்ளப்படாது. இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்பாக இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் முன்னாள் சோவியத் நாடு. தற்போது தனி சுதந்திர நாடாக இருக்கிறது. இது நேட்டோவில் இணைய முயன்றது. நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அந்நாட்டின் எல்லையில் அமெரிக்க படைகள் நிற்கும். இது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல். பாகிஸ்தான் எல்லையில் சீன ராணுவம் நின்றால் இந்தியாவுக்கு எப்படி அச்சுறுத்தலோ அப்படியான அச்சுறுதல்தான் ரஷ்யாவுக்கு ஏற்பட்டது. எனவே நேட்டோவில் இணைய வேண்டாம் என்று ரஷ்யா வலியுறுத்தியது. உக்ரைன் கேட்கவில்லை.
எனவேதான் போர் தொடங்கியது. இந்த போர் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று சொல்லப்பட்டது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி செய்ததால் இந்த போர் நீடித்தது. தற்போது இரண்டாம் உலகப்பொருக்கு பின்னர் ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்திய போராக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications