பயம் காட்டும் "பேய்" ஏரி.. 130 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தோன்றியது.. 93,000 ஏக்கர் நிலம் நாசம்!
சேக்ரமெண்டோ: அமெரிக்காவில் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒரு ஏரி மீண்டும் இப்போது தோன்றியுள்ளது. இதை அங்குள்ள மக்கள் கோஸ்ட் லேக் அதாவது பேய் ஏரி என்றும் சொல்கிறார்கள். நூற்றாண்டுக்கு முன்பு இந்த ஏரி திடீரென மறைந்தது ஏன்! இப்போது அது மீண்டும் உயிர்ப்பித்து வந்துள்ளது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மனிதர்கள் தங்கள் நலனுக்காக இயற்கையைத் தொடர்ச்சியாக மாற்றி வருகிறார்கள். குறிப்பாகப் பல நூற்றாண்டுகளாக இருக்கும் நீர்நிலைகளையும் கூட நாம் காலி செய்து வருகிறோம். இதனால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சென்னை உட்படத் தமிழ்நாட்டில் கூட இதுபோல பல நீர்நிலைகள் மாயமாகியுள்ளன.

130 ஆண்டுகளுக்குப் பிறகு
அதேநேரம் இது தமிழ்நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. உலகெங்கும் மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் இதுபோல ஏரிகள், நீர்நிலைகளைத் தொடர்ந்து அழித்தே வருகிறார்கள். அப்படி தான் மனிதர்களால் மாயமான ஒரு ஏரி சுமார் 130 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோன்றியுள்ளது.
கோஸ்ட் லேக்
அமெரிக்காவில் மிசிசிப்பிக்கு மேற்கே மிக பெரிய நன்னீர் நீர்நிலை இருந்தது. கலிபோர்னியாவின் சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில் உள்ள இந்த ஏரியின் பெயர் துலாரே ஏரி. இருப்பினும், மனிதர்கள் மேற்கொண்ட விவசாய வடிகால் நடவடிக்கைகளால் 100 ஆண்டுகளுக்கு முன்பு இது காணாமல் போய்விட்டது. இருப்பினும், யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்தாண்டு இந்த ஏரி மீண்டும் உருவாகியுள்ளது. இதை அங்குள்ள உள்ளூர் மக்கள், கோஸ்ட் லேக் அதாவது பேய் ஏரி என்றும் சொல்கிறார்கள்.
மிக பெரிய ஏரி
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த துலாரே ஏரி 100 மைல் நீளமும் 30 மைல் அகலமும் கொண்டிருந்தது. ஏரியின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு நீராவிக் கப்பல் மூலம் பயணித்துள்ளனர். அந்தளவுக்கு ஏரி நல்ல ஆழமானதாகவே இருந்துள்ளது. இருப்பினும், அப்போது விவசாயத்திற்காக பல்வேறு நீர்ப் பாசனத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் ஏரியை இணைக்கும் நீர்வழிகள் அனைத்தும் பிளாக் ஆனது. இதனால் மெல்ல அந்த நீர்நிலை மாயமானது.
அந்த பகுதியில் வசித்த டாச்சி யோகுட் பழங்குடியினர் அந்த ஏரியையே பிரதானமாக நம்பியிருந்தனர். அந்த பகுதியில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும். சியரா நெவாடா மலைகளிலிருந்து உருகும் பனியால் இந்த ஏரி நிரம்பி இருந்தது. இதனால் அதை வைத்தே உள்ளூர் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்திருந்தனர். மிசிசிப்பி ஆற்றின் மேற்கே மிகப் பெரிய நன்னீர் நீர்நிலையாக இருந்த இந்த ஏரி, மனிதர்களின் நீர்ப் பாசனத் திட்டங்களால் அழிந்து போனது.
மீண்டும் தோன்றியது எப்படி
இந்தச் சூழலில் தான் இந்த ஏரி கடந்தாண்டு முதல் மீண்டும் தோன்ற ஆரம்பித்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஆறுகள் திடீரென பல்வேறு காரணங்களால் மீண்டும் இந்த ஏரிக்கே திரும்பியுள்ளது. இதனால் அந்த ஏரியில் மீண்டும் நீர் நிரம்பத் தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் அங்குள்ள உள்ளூர் பழங்குடியின மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியரா நெவாடா மலை பகுதியில் இருந்து திடீரென அதிகளவில் பனி உருகியதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் துலாரே ஏரியை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. இருப்பினும், நூற்றாண்டுக்கும் மேலாக அந்த ஏரி வறண்டு கிடந்ததால் அங்கு மக்கள் விவசாயம் செய்யத் தொடங்கியிருந்தனர். மேலும், சிலர் வீடும் கூட கட்டியிருந்தனர். அவை அனைத்தும் இப்போது நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக சுமார் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications