“நெதன்யாகு! நீங்களும் ஒரு நாள்..” துருக்கி அமைச்சர் சொன்ன அந்த வார்த்தை! வீடியோவை பகிர்ந்து வார்னிங்
இஸ்ரேல்: காசா மீது 5வது நாளாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள்" என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை துருக்கி கல்வித்துறை துணை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் தற்போது வரை 950 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒருபுறம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மறுபுறம் மருந்துகளை கொண்டு வந்த டிரக்குகள் இஸ்ரேல் படையினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தங்கள் நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இதனை பகிர்ந்து, "ஒரு நாள் அவர்கள் உங்களையும் சுடுவார்கள். நீங்கள் கொல்லப்படுவீர்கள்" என துருக்கியின் கல்வித்துறை இணையமைச்சர் நசீப் இல்மாஸ் எச்சரித்திருக்கிறார்.
இஸ்ரேல் மீது துருக்கி, ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஏற்கெனவே கடும் விமர்சனங்களை வைத்து வருகிறன. காசா பகுதிக்கு தண்ணீர், மின்சாரத்தை துண்டித்தது, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதலை தொடுத்தது, உலகமே தடை செய்த பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியது என இஸ்ரேல் போர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தன. அதேபோல துருக்கி பாலஸ்தீனத்தின் போராளிகளுக்கு உதவுவதாக இஸ்ரேல் விமர்சித்திருந்தது. இப்படி இருக்கையில் துருக்கி அமைச்சர் ஒருவர் நேரடியாக இஸ்ரேல் அதிபருக்கு மிரட்டல் விடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications