ரஷ்ய அதிபர் புதினை கொல்ல சதி? திடீரென தாறுமாறாக பாய்ந்த உக்ரைன் ட்ரோன்கள்.. கடைசி நொடியில் பகீர்
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் மீது உக்ரைன் கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவரது ஹெலிகாப்டரை நோக்கி உக்ரைன் ட்ரோன்கள் அணிவகுத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், அதன் பிறகு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு தரப்பும் தீவிரமாக முயன்று வருகின்றன. இருப்பினும், அதில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. இதனால் 3 ஆண்டுகளைக் கடந்தும் கூட போர் தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவின் முக்கியமான ராணுவ தளபதியைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியிருந்தது. ரஷ்யாவுக்குள் உக்ரைன் நடத்திய இந்த கார் குண்டுவெடிப்பில் அந்த ராணுவ தளபதி உயிரிழந்திருந்தார். இந்தச் சூழலில் புதினையே கொல்ல உக்ரைன் முயன்றுள்ளதாகப் பரபர தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 20ம் தேதி குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியிருந்தது. ரஷ்ய அதிபர் புதினின் ஹெலிகாப்டரை குறிவைத்தே உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் இருந்ததாக ரஷ்ய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைன் அனுப்பிய ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புதினை கொல்ல முயற்சி?
அதாவது அந்த ட்ரோன்கள் ரஷ்ய அதிபர் புதின் செல்லும் விமானப் பாதையை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாக ரஷ்ய வான் பாதுகாப்பு பிரிவு தளபதி யூரி டாஷ்கின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மே 20 முதல் 22 வரை உக்ரைன் எங்கள் மீது மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. எங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ட்ரோன்களை அழித்தோம். மொத்தம் 1,170 ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.
என்ன நடந்தது?
குறிப்பாக மே 20ம் தேதி குர்ஸ்க் பிராந்தியத்திற்கு புதின் சென்ற போது ட்ரோன் தாக்குதல் அதிகம் இருந்தன. இதனால் அந்த ட்ரோன்களை அழித்து ரஷ்ய அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்தோம். புதின் ஹெலிகாப்டரை குறிவைத்தே உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியது. புதினின் ஹெலிகாப்டர் செல்லும் பாதையை ட்ரோன்கள் நெருங்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தது" என்றார்.
தீவிர விசாரணை
கடந்த சில நாட்களுக்கு முன்பு குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் சென்றார். குர்ஸ்க் என்பது உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷ்ய நகரமாகும். உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் இந்த இடம் முக்கியமானதாக மாறியிருக்கிறது. ரஷ்யாவின் முக்கிய படைகள் இங்கிருந்தே செயல்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நகரைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இருப்பினும், அதை முறியடித்துவிட்டதால் இதில் யாருக்கும் காயமோ சேதமோ ஏற்படவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபரைக் குறிவைத்து நிஜமாகவே உக்ரைன் தாக்குதல் நடத்தியதா.. இல்லை வெறுமென அச்சுறுத்தலை ஏற்படுத்த சில ட்ரோன்களை உக்ரைன் ஏவியதா என்பதில் தெளிவான பதில் இல்லை. இது குறித்து ரஷ்யா தொடர் விசாரணையில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications