உசுப்பிவிடும் உக்ரைன்! ஈரானை தொடர்ந்து.. ரஷ்யாவுக்கு எதிராக இறங்கும் அமெரிக்கா!
கீவ்: நேற்று உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை நடத்தியிருந்தது. இதில், ஒரு F-16 போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிலைமையை சமாளிக்க அமெரிக்காவின் உதவியை உக்ரைன் நாடியிருக்கிறது.
ஏற்கெனவே இஸ்ரேலை வைத்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியிருந்தது. இப்போது உக்ரைனை வைத்து, ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்க உள்ளதோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், "ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது பெரிய தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளமான ட்ரோன்கள், ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்றபோது, F-16 போர் விமானி உயிரிழந்தார். இதனை உக்ரைன் விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த விமானத்தை அவர், குடியிருப்பு பகுதிகளிலிருந்து தூர எடுத்து செல்ல முயன்றார். எனவே அவர் விமானத்திலிருந்து வெளியேற போதுமான நேரம் கிடைக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்திருக்கிறார்.
ரஷ்யாவின் தாக்குதலில் வீடுகளும், அரசு கட்டிடங்களும் சேதமடைந்தன. 12 பேர் காயமடைந்தனர். தலைநகர் கீவில் வெடிச் சத்தமும், ஏவுகணை எச்சரிக்கை சைரன்களும் ஒலித்ததால், மக்கள் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர். லிவ் பகுதியிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. பொதுவாக லிவ் பகுதியில் தாக்குதல்கள் குறவைாகத்தான் இருக்கும். ஆனால் இந்த முறை தீவிரமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதலையடுத்து, உக்ரைனுக்கு உடனடியாக ராணுவ உதவி தேவை என்று அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கு நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள, உக்ரைனின் வான் பாதுகாப்பை உடனே பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, கடந்த வருடம் உக்ரைன், அமெரிக்க தயாரிப்பான மூன்று F-16 ஜெட் விமானங்களை இழந்துள்ளது. விமானங்கள் குறித்த முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ரஷ்ய அதிபர் புதின், இஸ்தான்புல் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா 537 வான்வழி ஆயுதங்களை உக்ரைன் மீது ஏவியுள்ளது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் அடங்கும். இவற்றில் 249 தாக்குதல்கள் தடுக்கப்பட்டன. மேலும், 226 தாக்குதல்கள், செயல்படாத போலி இலக்குகளாகக் கருதப்பட்டன என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் படைகள் 211 ட்ரோன்களையும், 38 ஏவுகணைகளையும் அழித்துள்ளன.
மேலும், லிவ் பகுதியில் தொழிற்சாலை ஒன்று தீப்பிடித்து எரிந்தது. ட்ரோன் தாக்குதல்களால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. எல்லை தாண்டிய அச்சுறுத்தல் காரணமாக போலந்து மற்றும் நட்பு நாடுகளின் வான் பாதுகாப்பு படைகள், போலந்து வான்வெளியைப் பாதுகாக்கத் தயாராக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை மட்டுமே சரியான தீர்வாக கருதப்படுகிறது. ஆனால், உக்ரைன் தரப்பு இதற்கு ஒத்துழைக்காமல் இருக்கிறது. எனவே, போர் இப்போது வரை நீடித்து வருகிறது. அதே நேரம், போரில் அமெரிக்க இறங்கினால் அது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications